சென்னை: தாம்பரம் அடுத்து சேலையூர் மப்பேடு பகுதியில் சாத்தைய்யா(45) என்பவர் ஆவின் பாலகம் ஒன்று நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக அதிகாலையில் கடையின் வெளியே இறக்கி வைக்கப்படும் பால் பாக்கெட்களின் எண்ணிக்கை குறைவாக இருந்துள்ளது. இதனால் பால் பாக்கெட்டுகளை இறக்கி வைக்க வரும் நபர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் ஆர்டர் கொடுத்த பால் பாக்கெட்டுகளை சரியான எண்ணிக்கையில் இறக்கி வைக்கிறோம் பால் குறைவிற்கு அவர்கள் காரணம் இல்லை என்றும் வைக்கும் போது சரியான எண்ணிக்கையிலே வைக்கிறோம் குறைவிற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை எனக் கூறியுள்ளனர்.
அதன் பிறகு சந்தேகம் அடைந்த சாத்தைய்யா, அவரது கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அதனைப் பார்த்த போது கடந்த ஒரு மாதமாகப் பலமுறை மூன்று மர்ம நபர்கள் கடையின் அருகே வந்து பதுங்கி இருந்து ஒரு நபர் மட்டும் கடையின் வாசலில் இறக்கி வைத்திருந்த பால் பாக்கெட்டுகளை தனது சட்டைக்குள் அள்ளிச் செல்லும் சி.சி.டிவி காட்சிகள் பதிவாகியுள்ளன. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சாத்தைய்யா, இது குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் உள்ள குற்ற பிரிவு ஆய்வாளர் சுப்பிரமணியிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சாத்தைய்யாவை அனுப்பி வைத்துள்ளார் ஆய்வாளர் சுப்பிரமணி. ஆனால் அதன் பிறகு போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தொடர்ந்து பால் பாக்கெட்டுகளின் திருட்டு நடந்து வந்துள்ளது. இதனால் போலீசாரை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை என எண்ணம் கொண்டு, திருடர்களைத் தானே பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அதிகாலை பால் பாக்கெட்டுகள் இறக்கி வைப்பதற்கு முன்பு கடையின் அருகே வந்து பதுங்கி இருந்துள்ளார். அப்போது பால் திருட வந்த திருடனை மடக்கிப் பிடித்துள்ளார்.