தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எந்த ஒரு பணிக்கும் முழு முயற்சி வேண்டும் - ஓதுவார் சுஹாஞ்சனா - வைரல் வீடியோ

எந்த ஒரு பணியாக இருந்தாலும் நாம் செய்யக்கூடிய முயற்சி முழுமையாக இருந்தால் அதற்குண்டான வெற்றி கண்டிப்பாகக் கிடைக்கும் என பெண் ஓதுவார் சுஹாஞ்சனா தெரிவித்துள்ளார்.

ஓதுவார் சுஹாஞ்சனா  சுஹாஞ்சனா  பெண் ஓதுவார்  பக்தி நெறிகள்  முயற்சி  முதலமைச்சர் ஸ்டாலிம்  மு க ஸ்டாலின்  சென்னை செய்திகள்  ஓதுவார்  முதல் பெண் ஓதுவார்  அனைத்து சாதியினரும் அர்ச்சகர்  வைரல் வீடியோ  பெண் ஓதுவார் வைரல் வீடியோ
பெண் ஓதுவார் சுஹாஞ்சனா

By

Published : Aug 17, 2021, 7:58 AM IST

Updated : Aug 17, 2021, 10:35 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்டது. இருப்பினும் பல்வேறு காரணங்களால் அவை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்று 100ஆவது நாளான ஆகஸ்ட் 14ஆம் தேதி, அர்ச்சகர் பயிற்சி முடித்த 29 ஓதுவார்கள், அர்ச்சகர்கள் என 58 பேருக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

பெண் ஓதுவார்

இவர்கள் சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில், மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட 58 கோயில் பணியாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே சேலையூரைச் சேர்ந்த சுஹாஞ்சனா (27), மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் ஓதுவாராக நியமிக்கப்பட்டுள்ளார். ஓதுவார் சுஹாஞ்சனா முதல் பெண் ஓதுவார் என கூறப்பட்டுவருகிறார்.

ஆனால் 2007ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் திருச்சியைச் சேர்ந்த அங்கயற்கண்ணி, அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் முதல் பெண் ஓதுவாராக நியமிக்கப்பட்டார்.

கோயிலின் பணி

பக்தி நெறிகள்

நேற்று முன்தினம் (ஆக. 15) முதல் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோயிலில் ஓதுவாராகப் பணியைத் தொடங்கினார் சுஹாஞ்சனா. அப்போது அவர் திருவாசகம் பாடியது சமூக வலைதளங்களில் வைரலாகி பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்றது.

இந்நிலையில் ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய சுஹாஞ்சனா கூறியதாவது, “கரூர் மாவட்டம் வேலாயுதபாளையத்தில் பிறந்து வளர்ந்தேன். எனது பெற்றோர் சிறுவயதிலிருந்தே என்னை இறை நெறிகள் சம்பந்தமாகச் சொல்லிக் கொடுத்து வளர்த்தனர்.

நான் பத்தாம் வகுப்பு முடித்த பிறகு எனக்குள் இருந்த பாட்டுப் பாடும் விருப்பத்தை எனது பெற்றோரிடம் தெரிவித்தேன். இதையடுத்து கரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் தேவாரம், திருவாசகம் ஆகிய பாடல்களை மூன்று ஆண்டுகளாகக் கற்றுத் தேர்ந்தேன்.

கணவரின் துணை

பின்னர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மங்கையர்கரசியர் அறநெறி அறக்கட்டளையில், அறநெறி ஆசிரியராக மாணவ மாணவிகளுக்கு தேவாரம், திருவாசகம், ஒழுக்க நெறிகளைக் கற்றுக் கொடுத்துள்ளேன்.

இதையடுத்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, கோபிநாத் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு சென்னை வந்துவிட்டேன். எனது கணவர் தனியார் நிறுவனத்தில் வடிவமைப்புப் பொறியாளராகப் (டிசைனிங் என்ஜினீயர்) பணிபுரிந்துவருகிறார்.

பணி நியமனம்

எனது கணவரும், அவரது பெற்றோரும் தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தி வந்தனர். எனது குடும்பத்தில் உள்ளவர்களும் என்னை ஊக்கப்படுத்தினர். அதன்பின் இந்தப் பணியை எப்படித் தொடர்வது என எண்ணிக் கொண்டிருந்தபோது, செய்தித்தாள்களில் வந்த கோயில்களில் ஓதுவார் காலிப் பணியிடங்களைக் கண்டறிந்தேன்.

முதலமைச்சரிடம் பணி நியமன ஆணை

அதன் மூலமாக மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயிலுக்கு எனது கல்வித் தகுதிகளை விண்ணப்பம் மூலம் அனுப்பியிருந்தேன். அதில் நேர்முகத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றேன். பிறகு பாடல்கள் பாடிக் காண்பித்தேன். அதன் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கையில் பணி நியமன ஆணையைப் பெற்றேன்.

இந்தப் பணிக்கு வந்த பிறகு பெரும் சவால்களை எதிர்கொள்ளவில்லை. நண்பர்களும், உறவினர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுத்துவருகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்களும் என்னைப் பார்த்து பெண் ஓதுவாராக இருப்பதால் தங்களுக்க மகிழ்ச்சி எனத் தெரிவிக்கின்றனர்.

கோயில் அறங்காவலர்களும், ஊர் பொதுமக்களும் எனக்குப் பொன்னாடை போர்த்தி இந்தப் பணிகளை நீங்கள் சிறப்பாகச் செய்ய வேண்டும் என வாழ்த்திவருகின்றனர். கோயிலில் எனது பணியானது தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகியவைகளிலிருந்து பாடல்களைப் பாடி வழிபாடு நிறைவுசெய்ய வேண்டியது ஆகும்.

வைரல் வீடியோ

எந்த ஒரு பணிக்கும் முயற்சி வேண்டும்

தற்போது உள்ள காலத்தில் பெண்கள் எல்லா துறைகளிலும் சாதிக்க முடியும் என முயற்சிகள் எடுத்து பல்வேறு துறைகளில் முன் உதாரணமாக இருக்கின்றனர். ஓதுவார் பணியைப் படிக்க விருப்பம் உள்ள பெண்களும் அரசு இசைப்பள்ளி, பயிற்சிக் கல்லூரிகளில் முறையாகக் கற்றுக்கொண்டு வருங்காலத்தில் இதுபோன்ற பணிகளுக்கு முயற்சிக்கலாம்.

இதேபோன்று தமிழ்நாடு அரசு இன்னும் பெண்களுக்கு உறுதுணையாக இருந்து பெண் ஓதுவார்களுக்குப் பணியிடங்கள் கொடுப்பார்கள் என நம்பிக்கையுடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம். அதற்கு உண்டான முயற்சிகளில் பெண்கள் ஈடுபட வேண்டும்.

பெண் ஓதுவார் சுஹாஞ்சனா

எந்த ஒரு பணியாக இருந்தாலும் நாம் செய்யக்கூடிய முயற்சி முழுமையாக இருந்தால் அதற்குண்டான வெற்றி கண்டிப்பாக கிடைக்கும் அதற்கு உண்டான முயற்சிகளைத் தொடர்ந்து பெண்கள் எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: மனதை உருக்கும் குரல்... தமிழ்நாட்டின் முதல் பெண் ஓதுவாரின் பாடல்: ViralVideo

Last Updated : Aug 17, 2021, 10:35 AM IST

ABOUT THE AUTHOR

...view details