சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று 100ஆவது நாளான நேற்று (ஆக 14) அர்ச்சகர் பயிற்சி முடித்த 29 ஓதுவார்கள், அர்ச்சகர் என 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இவர்கள் சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில், மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட 58 கோயில் பணியாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பெண் ஓதுவார்
இதில் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே சேலையூரைச் சேர்ந்த சுஹாஞ்சனா (27), மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் ஓதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் அறநிலையத்துறை கோயில் கட்டுபாட்டில் செயல்படும் தேனுபுரீஸ்வரர் கோயிலில் இன்று (ஆக 15) முதல் ஓதுவாராக பணியாற்றத் தொடங்கியிருக்கிறார்.
மேலும் சுஹாஞ்சனா 10ஆம் வகுப்பு முடித்த பின்னர், தேவாரம் பாடுவதில் ஆர்வம் கொண்டதாகவும், இசைப்பள்ளியில் படித்து கொண்டிருக்கும்போதே மிகுந்த ஈடுபாடு கொண்டு, அதில் பயணித்ததாகவும் தெரிவித்தார்.
குவியும் பாராட்டு
பெண்கள் பல துறையில் பயணித்தாலும், ஓதுவாராகவும் பணியாற்ற முடியும் என்பதால், இதில் ஆர்வமாக விண்ணப்பித்து சேர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் பெண் ஓதுவாராக நியமிக்கப்பட்டதற்கு தமிழ்நாடு அரசுக்கும், அறநிலைத்துறையினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில் இன்று (ஆக. 15) சுஹாஞ்சனா பணியில் இணைந்து முதன்முதலாக பாடியபோது, எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இதையும் படிங்க: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தில் பணி நியமன ஆணை வழங்கிய முதலமைச்சர்