சென்னை:தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் (TNTEU) பதிவாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளது கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. மேலும் பதிவாளர் பதவியில் கடந்த 7 ஆண்டுகளாக பொறுப்பு என நியமித்து, கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை கேள்விக்குறியாக உள்ளவர்களை பதவியில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சராக கருணாநிதி இருந்தபோது, தொலைநோக்கு பார்வையுடன் நிறுவப்பட்டது தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம். முதலில் தற்காலிக கட்டடத்தில் சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள லேடி வெலிங்டன் வளாகத்தில் இயங்கி வந்தது. அதனைத் தொடர்ந்து சென்னையின் புறநகர் பகுதியான காரப்பாக்கத்தில் தனியாக பல்கலைக் கழகத்திற்கான வளாகம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் பி.எட், எம்.எட், M.Phil மற்றும் Ph.D போன்ற பட்டங்கள் வழங்கப்படுகின்றன. இந்தப் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் சுமார் 642 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன.
அவற்றில் 7 அரசும், 14 உதவி பெறும் கல்லூரிகளாகவும், மற்றவை சுயநிதி கல்லூரிகளாகவும் இருக்கின்றன. கல்லூரிகளின் இணைப்பை 3 ஆண்டிற்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக, பல்கலை துணைவேந்தர் இல்லாமல் உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு) பேராசிரியர் பி.சி.நாகசுப்ரமணி பிப்ரவரி 7-ம் தேதி பொறுப்பு பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதுவரை பதிவாளர் பொறுப்பில் இருந்த சுந்தரராஜன் விடுக்கப்படுகிறார் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பேராசிரியர் பதவி உயர்விற்கான சிண்டிகேட் கூட்டத்தில் இவரின் பெயர் இடம் பெற்றபோது, அதற்கு எதிர்ப்புத்தெரிவித்து புகார் அனுப்பி உள்ளனர். அதனடிப்படையில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் 20.10.22அன்று நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்திற்கான தீர்மானத்தில் அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் மட்டுமே கையொப்பம் போட்டுள்ளனர். அதிலும் கல்லூரி கல்வி இயக்குநர் தனது எதிர்ப்பு கருத்தை பதிவு செய்து கையொப்பமும் போட்டுள்ளார். 14 உறுப்பினர்களில் 4 பேர் மட்டுமே அனுமதி வழங்கி உள்ளனர். மற்ற 10 பேர் பதவி உயர்விற்கு கையொப்பம் போடாமல் இருந்துள்ளனர்.