சென்னை: மருத்துவப்படிப்பில் காலியிடங்கள் ஏற்படுவதால், அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கையை மருத்துவ கலந்தாய்வுக் குழு நடத்துகிறது.
நீட் தேர்விற்குப் பின்னரும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேராமல் காலியாக இருந்த இடங்கள் 2020 - 21-ம் கல்வியாண்டு வரையில் நிரப்பப்படாத இடங்கள் மாநில அரசின் ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டு நிரப்பப்பட்டது. இதனால் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக இல்லாமல் அரசு மருத்துவக்கல்லூரியில் அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டன.
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்படுவது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் படி, மாநிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் இடங்கள் காலியாக இருந்தாலும், தேசிய மருத்துவக் கலந்தாய்வு குழு தான் நிரப்ப வேண்டும் எனக் கூறப்பட்டது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங் அக்டோபர் 14-ம் தேதி முதல் டிசம்பர் 29-ம் தேதி வரையில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு முடிந்த பின்னரும், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான 847 இடங்களில் சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் தலா 1 இடங்கள் என 6 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
முதுகலை மருத்துவப்படிப்பிற்கான 2022 - 23ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு செப்டம்பர் 20ஆம் தேதி முதல் நவம்பர் 29ஆம் தேதி வரையில் நடத்தப்பட்டது. இந்த கலந்தாய்வில் அதிகளவில் காலியாக இருந்ததால், சிறப்பு ஸ்டே வேகன்சி கலந்தாய்வு 6-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடத்தப்படுகிறது.
இந்த கலந்தாய்வில் எம்டி, எம்எஸ், டிப்ளமோ, டிஎன்பி ஆகிய படிப்புகளில் 2,244 இடங்களும், 62 எம்டிஎஸ் இடங்களும் உள்ளன. இந்த இடங்களில் சேர விரும்பமுள்ளவர்கள் 50 ஆயிரம் முன்பணம் செலுத்த வேண்டும் எனவும், இடங்களைத் தேர்வு செய்த பின்னர் சேரவில்லை என்றால் முதுகலைப் படிப்பிற்கான நீட் தேர்வு 2023 எழுதுவதற்கு அனுமதிக்க முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறும்போது, "மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நிறைவடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்ட மாணவர் சேர்க்கை இடங்களில் 6 இடங்கள் நிரப்பப்படவில்லை. தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில் சேர ஆயிரக்கணக்கான மாணவர்கள் காத்துக்கிடக்கும் நிலையில், விலை மதிப்பற்ற மருத்துவ இடங்கள் வீணடிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.
மத்திய அரசின் இந்த புதிய விதி தான் தமிழ்நாட்டிற்கு பெரும் பாதிப்பாக உருவெடுத்திருக்கிறது. 2022 - 23ஆம் ஆண்டில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நிறைவடைந்து விட்ட நிலையில், சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் தலா 1 இடங்கள் நிரப்பப்படவில்லை. இந்த இடங்கள் தமிழ்நாட்டிற்கு திரும்ப ஒப்படைக்கப்படாது என்பதால் அவற்றைப் பயன்படுத்த முடியாது.
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1 மருத்துவரை உருவாக்க ரூ.1 கோடிக்கும் கூடுதலாக செலவிடப்படுகிறது. 6 இடங்கள் நிரப்பப்படாததால் பல கோடி ரூபாய் அரசு பணம் வீணாகும். அதைக் கடந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு பறிக்கப்பட்டிருக்கிறது.
இத்தகைய பாதிப்புகளுக்கு நிரந்தரத் தீர்வு அகில இந்திய ஒதுக்கீடு முறையை ரத்து செய்வது தான். 1980-களின் தொடக்கத்தில் அகில இந்திய ஒதுக்கீடு முறையை அறிமுகம் செய்வதற்கு நியாயமான காரணங்கள் இருந்தன. அப்போது பல மாநிலங்களில் போதிய எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரிகள் இல்லை. அந்த மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவம் பயில்வதை உறுதி செய்யும் நோக்கத்துடன் தான் அகில இந்திய ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்டது.