சென்னை சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் அமர்ராம் (53). இவர் சோழிங்கநல்லூரில் சொந்தமாக அடகு கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு திமுக வட்டச் செயலாளரான கிருஷ்ணமூர்த்தியிடம் 60 லட்ச ரூபாய் முன்பணம் கொடுத்து, 58 சென்ட் நிலத்தை கிரையம் செய்வதற்கான பத்திரப்பதிவு செய்துள்ளார்.
அதன்பின் 2018ஆம் ஆண்டு முழு கிரைய தொகையை கொடுத்தும் பத்திரப்பதிவு செய்துள்ளார். இதனிடையே இந்த நில பிரச்னை சம்பந்தமாக கிருஷ்ணமூர்த்தியின் சகோதரர் மனோகரன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் அமர்ராம் மீது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
மேலும் நிலம் தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி, அவரது சகோதரர் மனோகரன் மற்றும் அமர்ராம் ஆகியோர் பேச்சுவார்த்தையில் இருந்து வந்த நிலையில், அமர்ராம் சென்னை மெரினா காவல் நிலையத்தில் கடந்த மாதம் 17ஆம் தேதி புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், ‘எனக்கு நன்கு தெரிந்த வழக்கறிஞரான செந்தமிழ் என்பவர், கடந்த மாதம் 16ஆம் தேதி நிலம் தொடர்பாக பேச வேண்டும் என மெரினா கடற்கரைக்கு அழைத்தார். இதனால் எனது இருசக்கர வாகனத்தில் லைட் ஹவுஸ் அருகே சென்றபோது, திடீரென காரில் வந்த அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் என்னை கத்தியை காட்டி மிரட்டி, கண்ணைக் கட்டி திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு நிலத்தை விற்ற திமுக வட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அவரது மனைவியும் திமுக கவுன்சிலருமான விமலா உள்பட 10 பேர் என்னை மிரட்டி, அவர்களிடம் வாங்கிய நிலமான நாவலூர் பகுதியில் உள்ள 25 கோடி மதிப்புள்ள நிலத்திற்கு வெறும் 60 லட்சம் கொடுத்து கிரைய ஒப்பந்தம் ரத்து சான்றிதழில் கையெழுத்து பெற்றுக் கொண்டு சென்றனர்.
இது தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி, விமலா, செந்தமிழ் மற்றும் மனோகரன் உள்பட 10 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதன் மூலம் தொழிலதிபர் அமர்ராம், சில வருடங்களுக்கு முன்பு நாவலூர் ஏஜிஎஸ் தியேட்டர் அருகே உள்ள 58 சென்ட் நிலத்தை சுமார் 10 கோடி ரூபாய் கொடுத்து கிரையம் பெற்றது தெரிய வந்துள்ளது.
அதேநேரம் நிலத்தின் மீது நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருந்துள்ளது. தற்போது இந்த இடத்தின் மதிப்பு 25 கோடிக்கு மேல் செல்வதால், சொத்துக்காக சண்டை போட்ட கிருஷ்ணமூர்த்தி மற்றும் சகோதரர் மனோகரன் ஆகியோர் இணைந்து இந்த நிலத்தை பில்டர்ஸ் ஒருவருக்கு விற்று பணத்தை பங்கு போட நினைத்துள்ளனர்.
இந்த நிலத்தின் பவர் ஆப் அட்டார்னியை பில்டர்ஸ் ஒருவருக்கு மாற்ற தொழிலதிபர் அமர்ராமை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்து வர, கிருஷ்ணமூர்த்தி அடியாட்களை ஏவி அமர்ராமை கடத்தி உள்ளார். மேலும் கடத்தப்பட்ட அமர்ராமிடம் பத்திரத்தில் கையெழுத்து போடவில்லை என்றால், குடும்பத்தை கொன்றுவிடுவோம் என கூறி வீடியோ கால் மூலமாக அவரது வீட்டின் அருகே இருந்து ரவுடிகள் மிரட்டியுள்ளனர்.
தொடர்ந்து இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக அனைத்து சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றிய காவல்துறையினர், திமுக வட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அவரது மனைவியும் திமுக கவுன்சிலருமான விமலா கிருஷ்ணமூர்த்தி, செந்தமிழ் மற்றும் மனோகரன் உள்பட 10 பேர் மீது மெரினா காவல்துறையினர் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இவர்களின் மீது சட்ட விரோதமாக கூட்டம் கூடுதல், சிறை பிடித்து சொத்துக்களை அபகரித்தல், ஆள்கட்டத்தல் ,மிரட்டி பணம் பறிக்க காயம் ஏற்படுத்துதல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலத்தின் மீது, பத்திரப்பதிவு நடைபெற்றது தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:ஆண் வேடமணிந்து குட்கா கடத்திய பெண் கைது