சென்னை: திருவல்லிக்கேணி பாரதியார் சாலையில் 50 ஆண்டுகளுக்கும் மேலான மிகப் பழமையான கட்டடம் பல நாட்களாக மூடிய நிலையில் இருந்தது. இந்த கட்டடம் அதே பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசர் மற்றும் அவர்களது சகோதரர்கள் மூன்று பேருக்கு சொந்தமான இடம் என்று கூறப்படுகிறது.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான இந்த கட்டடத்தை இடிப்பதற்காக சென்னை மாநகராட்சியில் கடந்த அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி அதற்கான ஆணையைக் கட்டடத்தின் உரிமையாளர்கள் பெற்றுள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் மாநிலம் முழுவதும் தொடர்ந்து லேசான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. அந்தவகையில், சென்னையில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்தநிலையில் இன்று காலை மூடிய நிலையில் இருந்த கட்டடம் திடீரென இடிந்து விழுந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கட்டத்திலும் அதன் அருகிலும் பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.