சென்னை:பெரும்பாலும் பொழுதுபோக்கிற்காகவே பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களில், ஒரு சில பதிவுகள் நம்மை நெகிழ்வடையச் செய்யும். அப்படி நம் கண்ணில்பட்டு, நம்மை கண் கலங்கச் செய்ததுதான் மெர்லின் பாட்டியின் பதிவு. யார் இந்த மெர்லின் என்பதை குறித்த சிறப்பு செய்தி தொகுப்பைக் காணலாம்.
சென்னையைச் சார்ந்த 25 வயது இளைஞர் முகமது ஆசிக். இவர் "abrokecollegekid" பெயரிடப்பட்ட சமூக வலைத்தள பக்கத்தில், தான் சந்திக்கும் மக்களிடம், அவர்களின் பின்னணி குறித்து கேட்டு அதை வீடியோவாக பதிவிடுவது வழக்கம். குறிப்பாக, வாழ்வில் கஷ்டங்களைச் சந்திக்கும் மக்கள், இளம் வயதில் சாதனை புரிந்தவர்கள் என மக்களைத் தேடி தேடி அவர்களின் கதையை வீடியோவாக பதிவிடுவார்.
அப்படி அவர் பதிவிடும் வீடியோக்களில் உதவி தேவைப்படும் மக்களுக்கு, உதவிகளை தானே செய்வார். இல்லையெனில் அவர் பதிவிடும் வீடியோக்களை பார்க்கும் பார்வையாளர்கள் மூலம் உதவிகளைச் செய்ய முன் வருவார்.
யார் இந்த மெர்லின் பாட்டி? சில நாட்களுக்கு முன்பாக ஒரு வீடியோ பதிவிட்டு இருந்தார். அதில் சாலையோரம் யாசகம் கேட்டு வாழும் ஒரு மூதாட்டியிடம் அவரைப் பற்றி ஆங்கிலத்தில் கேட்க, அதற்கு அந்த மூதாட்டி தன்னுடைய பெயர் மெர்லின் என்றும், தான் பர்மாவைச் சார்ந்தவர் என்றும், தன்னுடைய கணவர் சென்னையைச் சார்ந்தவர் என்பதால் சென்னைக்கு வந்ததாக கூறினார்.
மேலும், உறவினர்கள் அனைவரும் இறந்து விட்டதால் சாலையோரம் அமர்ந்து யாசகம் கேட்டு வாழ்வதாகவும், சில நேரம் உணவு கிடைத்தால் அதை உண்டு பசியைப் போக்கிக் கொள்வதாகவும், எதுவும் கிடைக்கவில்லை என்றால் பட்டினியாகவே இருப்பதாக தெரிவித்தார், 81 வயதான மெர்லின் பாட்டி.
பின்னர் முகமது ஆசிக், மெர்லின் பாட்டியிடம் சென்னை வரும் முன் பர்மாவில் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என கேட்டதற்கு, மெர்லின் பாட்டி, தான் ஆசிரியராக பணியாற்றிதை கூறியதுதான் அனைவரையும் மனம் உருகச் செய்தது. குறிப்பாக அந்த வீடியோவில் மெர்லின் பாட்டி முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே பேசி இருப்பார்.