சென்னை:இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 800 திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நேற்றிரவு (செப். 8) நடைபெற்றது. இப்படத்தை இயக்குனர் ஸ்ரீபதி இயக்கி உள்ளார். முத்தையா முரளிதரனாக நடிகர் மாது மிட்டல் நடித்து உள்ளார்.
இது குறித்து இயக்குனர் ஸ்ரீபதி பேசும்போது, பயோபிக் எடுப்பதற்கு முதலில் உண்மையை சொல்வதற்கான தைரியம் வேண்டும். இந்தப் படம் முத்தையா முரளிதரன் பெருமையை பேசும் படமாக இருக்கக் கூடாது என்று முத்தையா முரளிதரன் என்னிடம் கூறினார். இந்தப் படம் தொடங்குவதற்கு முன்பு என் மனதில் இருந்த எண்ணங்கள் படம் தொடங்கும்போது மாறிவிட்டது.
முத்தையா முரளிதரன் வாழ்க்கையை முழுமையாக ஆய்வு செய்து பல்வேறு தரப்பினரிடம் பேசி இந்த கதையை எழுதினேன். கதை எழுதும் போதும், படத்தை எடுக்கும் போதும் பல்வேறு சவால்கள் இருந்தன. இதையெல்லாம் தாண்டி ஒரு நேர்மையான படத்தை எடுத்துள்ளேன்" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பேசும்போது, "2018 ஆம் ஆண்டு இயக்குநர் வெங்கட் பிரபு, இயக்குனர் ஸ்ரீபதி ஆகியோர் என்னை சந்தித்து நற்குணம் மன்றம் மூலமாக இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வந்தனர். வெங்கட் பிரபு இலங்கைக்கு என் வீட்டுக்கு வந்த போது நான் வாங்கிய கோப்பைகளை பார்த்து என் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கலாம் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீபதி இலங்கையில் இரண்டு ஆண்டுகள் தங்கி இந்த கதையை எழுதினார். வெங்கட் பிரபு தான் இந்த படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் இந்த படத்தை ஸ்ரீபதி இயக்க முடிவு முடிவு செய்தோம். இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிப்பதாக இருந்தது.