சென்னை:அசாம் மாநிலம் கவுஹாத்தியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் 147 பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர். அதில் கவுஹாத்தியை சேர்ந்த ஹேம்நாத் (61) என்பவர் தனது 8 வயது பேத்தி பிரசித்தா உட்பட குடும்பத்தினர் 4 பேருடன் இந்த விமானத்தில் பயணித்தார்.
விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது விமானியின் கேபினில் திடீரென அவசரகால எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. விமானத்துக்குள்ளும் அந்த சைரன் ஒலி கேட்டது. இதனால் விமானத்தில் பெரும் பரப்பு பரபரப்பு ஏற்பட்டது. விமான பணிப்பெண்களும், விமான ஊழியர்களும் பதற்றத்துடன் விமானத்திற்குள் அங்கும் இங்கும் ஓடி பயணிகளை கண்காணித்தனர்.
அப்போது, பயணி ஹேம்நாத்தின் பேத்தி பிரசித்தா அவர் அமர்ந்திருந்த விமான இருக்கைக்கு கீழே அவசரகால பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த லைஃப் ஜாக்கெட்டை எடுத்து அணிந்து கொண்டிருந்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விமான பணிப்பெண்கள் அந்த சிறுமியிடம் விசாரித்தனர். அந்த சிறுமி பயந்து அழத் தொடங்கினார். பின்னர் சிறுமியின் தாத்தா ஹேம்நாத் (61) சிறுமியை பக்குவமாக விசாரித்தபோது, விமான இருக்கை அருகே இருந்த ஒரு பட்டனை தான் அழுத்தியதாகவும், உடனே இருக்கை மேலே தூக்கி அதிலிருந்த லைஃப் ஜாக்கெட் வெளியே வந்ததாகவும், அதனை தான் விளையாட்டாக எடுத்துவிட்டதாகவும் தெரிவித்தார். இதை அடுத்து விமானப் பணிப்பெண்கள் லைஃப் ஜாக்கெட்டை சிறுமியிடம் இருந்து வாங்கி இருக்கைக்கு அடியில் உள்ள பாதுகாப்பு பகுதியில் வைத்து மூடினர். இதையடுத்து சைரன் ஒலி நின்றது.
இதுகுறித்து விமான ஊழியர்கள் கூறும்போது, "விமானத்தில் ஒவ்வொரு இருக்கைக்கும் கீழே இந்த உயிர் காக்கும் லைஃப் ஜாக்கெட் இருக்கும். அவசர ஆபத்து நேரத்தில் மட்டும் பயணிகள் ஒவ்வொருவரும் அவரவர் சீட்டுகளுக்கு அருகே உள்ள அந்த பட்டனை அழுத்தி லைஃப் ஜாக்கெட்டை எடுத்து போட்டுக் கொள்ள வேண்டும். இது தவிர மற்ற நேரங்களில் இந்த பட்டனை யாரும் கூடாது. அதை மீறி யாராவது உபயோகப்படுத்தினால், இதைப்போல் அபாய சைரன் விமானியின் கேபின் மற்றும் விமானம் முழுவதும் கேட்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது" என்றனர்.