சென்னை:தாம்பரத்தைச் சேர்ந்த நோயாளி ஒருவர் தாங்க முடியாத வயிற்று வலியால் 2 மாதங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி அன்று வலி மற்றும் வீக்கத்துடன், சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் இருந்ததும், அது 30cm X 20cm அளவிற்கு ஒரு கட்டி வளர்ந்து இருந்ததை கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த பெரிய கட்டிதான் அந்த நபருக்கு வயிற்று வலி ஏற்பட காரணமாக இருந்தது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பின்னர் உடனடியாக சிகிச்சை தொடங்கப்பட்டு, CT ஸ்கேன் செய்ததில் கல்லீரலுக்குக் கீழே ஒரு பெரிய கட்டி இருப்பதைக் காட்டி இருப்பதும், அது சிறுகுடலின் வலதுபுறத்தில் தள்ளியும், பெருங்குடலுடன் ஒட்டிக்கொண்டும் இருந்தது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் குழுவினர், 4.5 மணி நேர அறுவை சிகிச்சை செய்து அக்கட்டியை நீக்கினர்.
இது குறித்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் டீன் ஆர்.முத்துசெல்வன் கூறுகையில், "இக்கட்டியின் அளவு மிகவும் பெரியதாக இருந்ததால், வயிற்றில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள போதுமான இடம் இல்லாமல் இருந்தது. இதனால், சிகிச்சை மிகவும் சவாலாக அமைந்தது. இருப்பினும், கட்டியை முக்கியமான ரத்த நாளங்கள் மற்றும் உறுப்புகளுக்கும் சேதமில்லாமல் பாதுகாப்பாக அகற்றி வெற்றிப்பெற்றது.