தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொழில்கல்வி படிப்புகளில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் - மருத்துவத்தை அடுத்து தொழிற்கல்வி ஒதுக்கீடு

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில்படிப்புகளில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

மருத்துவத்தை அடுத்து தொழிற்கல்வி ஒதுக்கீடு
மருத்துவத்தை அடுத்து தொழிற்கல்வி ஒதுக்கீடு

By

Published : Aug 26, 2021, 11:54 AM IST

Updated : Aug 26, 2021, 3:52 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 4ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு ஏனைய தொழிற் கல்விப் படிப்புகளில் 7.5 விழுக்காடு ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட முன்வடிவினை, நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்வதென தீர்மானிக்கப்பட்டது.

மருத்துவத்தை அடுத்து தொழிற்கல்வி ஒதுக்கீடு

அதனடிப்படையில் இன்று (ஆக.26) நடைபெற உள்ள உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை விவாதத்திற்கு முன்னதாக, தொழிற்கல்விப் படிப்புகளில் 7.5 விழுக்காடு ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமுன்வடிவினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

கடந்த ஆண்டுகளில் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைவாக இருந்த காரணத்தால், அரசுப் பள்ளி மாணவர்கள் தொழிற்கல்வி பயிலுவதற்குத் தடையாக உள்ள காரணிகள் என்னவென்று ஆய்வு செய்வதற்கும், அவர்களின் சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதற்கும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைக் கண்டறிந்து, உரிய தீர்வுகளை பரிந்துரை செய்திடவும் ஓய்வு பெற்ற டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு, அவ்வாணையத்தின் அறிக்கை பெறப்பட்டது.

ஸ்டாலின்

எதிர்க்கட்சிகள் ஒருமித்த ஆதரவு

அந்த ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று, அதனைச் செயல்படுத்தும் விதமாக, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் 7.5 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கியதைப் போன்றே, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு ஏனைய தொழிற் கல்விப் படிப்புகளிலும் 7.5 விழுக்காடு ஒதுக்கீடு வழங்க வகை செய்ய, எதிர்க்கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் சட்டமுன்வடிவினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.


இதனைத் தொடர்ந்து உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “2006ஆம் ஆண்டு தொழில்கல்வி நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு 12ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

இருப்பினும் பல்வேறு சமூக, பொருளாதார ஏற்றதாழ்வுகளால் தொழில் கல்வியில் மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ள காரணத்தினால், ஓய்வு பெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு, ஆணையத்தின் பரிந்துரையின் பெயரில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு தொழில் படிப்புகளில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு அளிப்பதன் மூலம் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கிடையே உண்மையான சமத்துவத்தை கொண்டு வருவதற்கான உறுதியான நடவடிக்கையாக இது அமையும்” என்றார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

பொறியியல் , வேளாண்மை, கால்நடை மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு அனைத்து இடஒதுக்கீட்டு பிரிவுகளிலும் 7.5 விழுக்காடு இடங்கள் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:உச்ச நீதிமன்றத்துக்கு 3 பெண்கள் உள்பட 9 நீதிபதிகள்: கொலிஜியத்தின் பரிந்துரை ஏற்பு

Last Updated : Aug 26, 2021, 3:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details