கரோனாவைக் கட்டுப்படுத்தும்விதமாக வார நாள்களில் இரவு முழு ஊரடங்கும், ஞாயிறன்று முழு ஊரடங்கும் கடைப்பிடிக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.
மேலும், அத்தியாவசிய தேவைகளின்றி வெளியே வருவோரின் வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறை தரப்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் நேற்று மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.
அதன்படி சென்னையில் நேற்று 200 வாகன சோதனைச்சாவடிகள் அமைத்து, சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல் துறையினர் என ஏழாயிரம் பேர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அதில், அத்தியாசியமின்றி வாகனங்களில் சுற்றித் திரிந்ததாகக் கூறி 673 வாகனங்களைப் பறிமுதல்செய்து, வாகன ஓட்டிகள் மீது 144 குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் இருசக்கர வாகனங்கள் 572, நான்கு சக்கர வாகனங்கள் 31, மூன்று சக்கர வாகனங்கள் 55, இதர வாகனங்கள் 15 என மொத்தம் 673 வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் அளித்தனர். பறிமுதல்செய்யப்பட்ட வாகனங்களை முறையான ஆவணங்கள் காண்பித்த பிறகு எச்சரித்து அனுப்ப முடிவுசெய்துள்ளதாகவும் கூறினர்.