சென்னை:பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, மூவரசம்பேட்டை அருகே உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயில் குளத்தில், நேற்று (ஏப்ரல் 5) தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். தீர்த்தவாரியின்போது கோயில் குளத்துக்குள் அர்ச்சகர்களும், அப்பகுதி மக்களும் இறங்கினர்.
அப்போது கோயில் குளத்துக்குள் மூழ்கிய சூர்யா, பணேஷ், ராகவ், யோகேஸ்வரன், ராகவன் ஆகியோர் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இச்சம்பவம் இன்று (ஏப்ரல் 6) சட்டப்பேரவையில் எதிரொலித்தது.
இவ்விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், "கோயில் குளங்களை தூர்வாரும் பணியை அரசு முறையாக மேற்கொள்ள வேண்டும். குளத்தில் மூழ்கி இறந்தவர்கள் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை போதுமானதாக இருக்காது. தமிழ்நாடு அரசு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும்" என வலியுறுத்தினார்.