சென்னை:பிஇ, பிடெக் பொறியியல் படிப்பில் மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், அண்ணா பல்கலைக்கழகம், அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் சேர்வதற்கு கலந்தாய்வு நடைபெற்றது.
2021-22ஆம் கல்வியாண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 17 வரை நான்கு சுற்றுகளாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான துணைக் கலந்தாய்வு அக்டோபர் 14 முதல் 24ஆம் தேதி வரை நடைபெற்றது. இடங்களைத் தேர்வுசெய்த மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு உரிய கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு பிஇ, பிடெக் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு 440 பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்கள் ஒதுக்கப்பட்டன. கலந்தாய்வின் மூலம் சேர்வதற்கு 95 ஆயிரத்து 336 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அவர்களில் 81 ஆயிரத்து 433 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர்.