இரு மோசடி வழக்குகளில் 412 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.35 லட்சம் பறிமுதல் சென்னை:மத்திய குற்றப்பிரிவில் இரு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 412 சவரன் தங்க நகைகள் மற்றும் 35 லட்சம் ரூபாயை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பார்வையிட்டார். மேலும், சிறப்பாக பணிபுரிந்த காவலர்களைப் பாராட்டிச் சான்றிதழ் வழங்கினார்.
பிரபல பிலிப்ஸ் நிறுவனத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு கணக்கியல் நிபுணராகப் பணியாற்றிய அகஸ்டின் சிரில் என்பவர், முறைகேடாக அலுவலக செயலியைப் பயன்படுத்தி 5 கோடி ரூபாய் கையாடல் செய்துள்ளார். இந்த மோசடி தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணாநகர் பகுதியில் பதுங்கி இருந்த அகஸ்டின் சிரில்(29) மற்றும் அவரது நண்பர் ராபின் கிறிஸ்டோபர் ஆகிய இருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து 215 சவரன் தங்க நகைகள், ரூ.6 லட்சம் பணம், ஒரு கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனம், லேப்டாப், செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதே போல, சுங்கசாவடியில் ராஜேஷ் & பிரதர்ஸ் பெயரில் பருப்பு வர்த்தகம் செய்து வரும் ராஜேஷ் தனக்கும் தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் சொந்தமாக 4 நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவரது தலைமை அலுவலகத்தில் பணியாற்றிய சரண்யா, பிரதீபா, திவ்யா ஆகிய மூவரும் கடந்த 10 ஆண்டுகளாக கணக்கு வழக்குகளை பராமரித்து வந்தனர்.
வருடத்தின் இறுதியில் ராஜேஷ் கணக்கு வழக்குகளை விசாரணை செய்த போது 2 கோடியே 60 லட்சத்து 55 ஆயிரத்து 266 ரூபாயை மூன்று பெண்களும் கையாடல் செய்தது தெரியவந்தது. இந்த மோசடி தொடர்பாக தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சரண்யா(32) மற்றும் பிரதீபா ஆகிய இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்களிடம் இருந்து 197 சவரன் தங்க நகைகள், 27.50 லட்சம் ரூபாய் பணம், 3 செல்போன்கள் மற்றும் பல ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.
இந்த இரு வழக்குகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சிறப்பாகப் பணிபுரிந்து குற்றவாளிகளைக் கைது செய்து மொத்தம் 412 சவரன் தங்க நகைகள், ரூபாய் 35 லட்சம் பணம், மற்றும் 1 கார், இருசக்கர வாகனம், லேப்டாப் மற்றும் 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், வங்கிகணக்குகளில் இருந்த 67 லட்சம் பணம் முடக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட நகைகள் மற்றும் பணத்தை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பார்வையிட்டார். பின்னர் சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் மீனா, உதவி ஆணையர் ராஜசேகரன், காவல் ஆய்வாளர்கள் ரேவதி, சுமதி உட்பட 26 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டு தெரிவித்து வெகுமதி சான்றிதழை வழங்கினார்.
இதையும் படிங்க:கூரைக்குள் குட்டி இசைஞானி: கேரளாவில் வைரலான சிறுவன் அபிஜித் வீடியோ.!