தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் 40 ஆயிரம் போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் - தாம்பரம் ஆணையர் ரவி

தமிழ்நாட்டில் போக்குவரத்திற்கு 40 ஆயிரம் காவலர்களை ஒதுக்க வேண்டும் எனவும்; போக்குவரத்து காவலர்களை அதிகளவு ஒதுக்கினால் மாநிலத்தில் குற்றங்கள் குறையும் எனவும் தாம்பரம் காவல் ஆணையர் ரவி தெரிவித்தார்.

தாம்பரம் ஆணையர் ரவி பேட்டி
தாம்பரம் ஆணையர் ரவி பேட்டி

By

Published : May 25, 2022, 5:38 PM IST

சென்னை:சென்னையில் பல பகுதிகளில் எல்இடி விளக்குகளுடன் கூடிய சிக்னல்கள் பொருத்தியதுபோல் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட குரோம்பேட்டை சிக்னல் பகுதியில், எல்இடி விளக்குகளுடன் கூடிய சிக்னலை தாம்பரம் காவல் ஆணையர் ரவி இன்று(மே 25) திறந்து வைத்தார்.

சிக்னலை திறந்து வைத்து வாகன ஓட்டிகளுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் மற்றும் இனிப்புகளை ஆணையர் வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த காவல் ஆணையர் ரவி கூறுகையில், "குரோம்பேட்டையில் உள்ள பழுதடைந்த சிக்னல்களை புதுப்பித்து அப்பகுதியில் முதல்முறையாக எல்இடி விளக்குகளுடன் கூடிய சிக்னல் பொருத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலின்போது வாகன ஓட்டுநர்கள் தூரத்திலிருந்து பார்த்தால் கூட சிக்னல் தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்துப் பகுதிகளிலும் இந்த வகை சிக்னல் பொருத்தப்படும்.

குற்றச்சம்பவங்கள் குறையும்: தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 44ஆயிரம் காவலர்கள் உள்ள நிலையில், போக்குவரத்து காவல் துறையினர் 12 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர். போக்குவரத்திற்கு 40 ஆயிரம் காவலர்களை ஒதுக்க வேண்டும். குற்றத் தடுப்புக்கு 40 ஆயிரம் காவலர்கள் ஒதுக்க வேண்டும்.

மீதமுள்ளவர்கள் சட்டம் ஒழுங்கு பணிகளுக்கு ஒதுக்கபட வேண்டும். சாலை விதிகளை மதித்தால் மற்ற சட்டங்களையும் பொதுமக்கள் மதிப்பார்கள். இவ்வாறு செய்தால் குற்றங்கள் குறையும். போக்குவரத்து காவலர்களை அதிகளவு ஒதுக்கினால் செயின் பறிப்பு, பிக் பாக்கெட், கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்களைத் தடுக்க முடியும். போக்குவரத்து காவலர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இருசக்கர வாகன ஓட்டிகள், கட்டாயம் தலைக்கவசம் அணிந்து போக்குவரத்து விதிமுறைகளை மதித்துச் செல்ல வேண்டும். சாலை விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். காவல் துறையினரின் ஒழுக்கம், சாலை ஒழுக்கம் என இவ்விரண்டு ஒழுக்கங்களும் சரியாக இருந்தால் சமுதாயத்தின் ஒழுக்கம் சரியாக இருக்கும். சாலை விதிகளை மீறும் காவலர்கள் மீதும் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

தாம்பரம் ஆணையர் ரவி பேட்டி

தாம்பரம் காவல் ஆணையரகப் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. சிசிடிவி கேமராக்கள் மூன்றாவது கண் போன்றது. பழுதடைந்த கேமராக்கள் மாற்றப்பட்டு புது கேமராக்கள் பொருத்தப்படும். முறையாகப் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். குற்றங்களைத் தடுக்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Video: பிறந்தநாளில் பழனி முருகனை குடும்பத்துடன் தரிசனம் செய்த நடிகர் கார்த்தி!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details