சென்னைஅடுத்த பள்ளிக்கரணை ராஜேஷ் நகரைச் சேர்ந்தவர் ஹரிகரன். இவரது மகன் அனிருத் கிருஷ்ணன் (வயது 4). ஹரிகரன் தஞ்சாவூரில் உள்ள தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வார விடுமுறைக்காக ஹரிகரன் சென்னையில் உள்ள வீட்டிற்கு வந்தார்.
பின்பு, தனது மகன், மனைவி மற்றும் உறவினர்கள் 6 பேருடன் விடுமுறையை கொண்டாட மெரீனா கடற்கரைக்கு சென்று உள்ளார். இதையடுத்து மெரீனாவில் உள்ள அண்ணா நீச்சல் குளத்திற்கு மகன் அனிருத் கிருஷ்ணனை அழைத்து சென்றார். நீச்சல் குளத்தில் குளித்து விட்டு ஹரிகரன் மற்றும் குடும்பத்தினர் மேலே வந்தனர். ஆனால் 4 வயதுடைய அனிருத் கிருஷ்ணனை காணவில்லை எனக் கூறப்படுகிறது.
தேடி பார்த்தபோது நீச்சல் குளத்தில் மூச்சுத் திணறி தண்ணீரில் முழ்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுவனை மீட்டு திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதத்தில், மருத்துவர்கள் ஏற்கனவே சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்த அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:பாமக ஆட்சியா? திமுக ஆட்சியா?.. திமுக கிளை செயலாளர் மிரட்டுவதாக ஆசிரியை புகார் வீடியோ வைரல்!
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி சென்னையில் வசித்து வரும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் குப்தா என்பவரின் மகன் தேஜஸ் குப்தா (வயது7) பெரியமேட்டில் உள்ள மாநகரட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட ‘மை லேடி’ என்ற நீச்சல் குளத்தில் குளித்த போது நீரில் முழ்கி இறந்தார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதன் ஏதிரொலியாக சென்னை மாநகராட்சி தரப்பில் இருந்து இது போன்ற அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சென்னை மாநகராட்சியின் நீச்சல் குளங்களில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களை அனுமதிக்கக்கூடாது, 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை நீச்சல் தெரிந்த பெற்றோர்கள் அல்லது பெரியவர்கள் துணை இல்லாமல் அனுமதிக்க கூடாது உள்ளிட்ட விதிமுறைகள் விதிக்கப்பட்டன.
இந்நிலையில், சென்னை மெரினா நீச்சல் குளத்தில் 4 வயதான அனிருத் கிருஷ்ணன், நீரில் மூழ்கி உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நீச்சல் குளத்தில் நேற்று (26-7-2023) மதியம் குடும்பத்தினருடன் நீந்துவதற்கு வந்த பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த அனிருத் என்ற ஐந்து வயது சிறுவன் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு வருத்தமடைந்தேன்.
சிறுவனின் இறப்பு குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளேன். சிறுவன் அனிருத்தை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டு உள்ளேன்" எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:டேங்கர் லாரி - ரோல்ஸ் ராய்ஸ் கார் மோதி கோர விபத்து... தனியார் குழும இயக்குனர் உள்பட 3 பேர் படுகாயம்!
இதையும் படிங்க:7 வயது சிறுவன் பலி எதிரொலி.. சென்னை நீச்சல் குளங்களுக்கு மாநகராட்சி புதிய கட்டுப்பாடு!