சென்னை:
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடருக்கான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நேற்று (அக். 8) நடைபெற்றது. விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், கிரிக்கெட் போட்டி நடைபெற்ற சேப்பாக்கம் மைதானம் அருகே சட்ட விரோதமாக கள்ள சந்தையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை விற்பனை செய்ததாக 30 நபர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 42 டிக்கெட்டுகள் மற்றும் 55 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.
சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில், நேற்று (அக்.08) இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியினருக்கு இடையே உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்நிலையில், இந்தியா- ஆஸ்திரேலியா இடையே நடக்கும் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில், சட்ட விரோதமாக விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்ய, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.