சென்னை:அம்பத்தூர் அருகேவுள்ள ஓரகடம் பகுதியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவர் மோனிஷ் (19). இவர் தனது வீட்டு அருகில் வசிக்கும் தனியார் நிறுவன பெண் ஊழியரை காரில் ஏற்றி விட அம்பத்தூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த மூன்று பேர் இவர்களிடம் வீண் தகராறில் ஈடுபட்டனர்.
பின்னர், பெண்ணின் கையில் இருந்த செல்போனை அடித்து பறித்து கீழே உடைத்து, கொலை மிரட்டல் விடுத்தனர். இதன் பிறகு, மோனிஷ் அம்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் நின்று கொண்டிருந்த ரோந்து காவலர் பிரபாகரனிடம் தகவல் கூறியுள்ளார். இதையடுத்து அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கிருந்த மூவரையும் பிடித்து கண்டித்தார்.
அப்போது அவர்கள் மூவரும் பிரபாகரனை தாக்கி அவரது கைப்பேசியை கீழே போட்டு உடைத்தனர். இது குறித்து மோனிஷ், பிரபாகரன் ஆகியோர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
தட்டிக்கேட்ட காவலர் மீது தாக்குதல் நடத்திய 3 வாலிபர்கள் கைது தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட மூவரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் திருமுல்லைவாயிலைச் சேர்ந்த பிரபு (29), அயனாவரத்தைச் சேர்ந்த சூர்யா (24), ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த சிவகுமார் (43) என்பது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்து, வேறு ஏதேனும் குற்றச்செயலில் ஈடுப்பட்டு உள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 4 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது