சென்னை:பெப்பர் ஸ்பிரே அடித்து 50 லட்ச ரூபாய் பறித்த கொள்ளையர்களை 10 மணி நேரத்தில் போலீசார் கைது செய்து அதிரடி காட்டினர். செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (வயது 55). இவர் வெளிநாட்டு பணத்தை இந்திய நாட்டு பணமாக மாற்றும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்றிரவு (மார்ச்.18) பண பரிமாற்றத்திற்காக, 50 லட்ச ரூபாய் பணத்துடன் தனது நிறுவன ஊழியர் காஜாமொய்தீனுடன் இருசக்கர வாகனத்தில் மண்ணடிக்கு சென்றுள்ளார்.
அப்போது யானைகவுனி பெருமாள் கோயில் அருகே சென்ற போது, இருசக்கர வாகனத்தில் ஜாகிர் உசேனைப் பின் தொடர்ந்து வந்த இருவர், அவரின் வாகனத்தின் மீது மோதி அவரை கீழே தள்ளிவிட்டுள்ளனர். பின்னர், அவர்கள் பெப்பர் ஸ்பிரேவை இருவர் கண்ணிலும் அடித்துவிட்டு ஜாகீர் உசேன் கையில் வைத்திருந்த 50 லட்ச ரூபாய் பையை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.
இது தொடர்பாக, ஜாகீர் உசேன் யானைகவுனி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை வைத்து 50 லட்ச ரூபாய் பறித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இதனைத் தொடர்ந்து, இரவு பத்து மணி அளவில் பெற்ற புகாரில் இரண்டு மணி நேரத்தில் காவல்துறையினர் துப்பு துலக்கியதோடு, ஜாகிர் உசேன் உடன் பயணித்த காஜாமொய்தினை சந்தேக வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார், காஜா மொய்தினிடம் நடத்திய விசாரணையில், பணிக்கு சேர்ந்து நான்கு மாதங்களே ஆன நிலையில் அடிக்கடி ஜாகிர் உசேன் பணத்தை கை மாற்றுவதற்காக செல்வதை கண்காணித்து வந்துள்ளார். இது குறித்த விவரங்களை நன்கு அறிந்து கொண்ட காஜா மொய்தின், தினசரி தான் செல்லும் மதுபான கடையில் நண்பராக அறிமுகமாகிய ஆற்காட்டைச் சேர்ந்த அஜித் என்பவரிடம் ஜாகிர் உசேன் குறித்த தகவல்களை தெரிவித்துள்ளார்.