இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த ஜனவரி 5ஆம் தேதி நடத்தப்பட்டு, அதனடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் தேதியுடன் முடிவடைந்த முதல்கட்ட கலந்தாய்வில் 9 ஆயிரத்து 550 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
இவற்றில் பிற பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒட்டுமொத்தமாக 371 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இந்த இடங்களையும் அவர்கள் பொதுப்பிரிவில் போட்டியிட்டுத் தான் வென்றுள்ளனர். இது முதல்கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட்ட ஒட்டுமொத்த இடங்களில் 3.8 விழுக்காடு மட்டுமே ஆகும்.
இந்த சமூக அநீதிக்கு காரணம், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பட்டியலினம், பழங்குடியினம், உயர்வகுப்பு ஏழைகள் என அனைத்துப் பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படும் போதிலும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படாதது தான்.
மத்திய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, அகில இந்திய ஒதுக்கீட்டில், 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்யவேண்டும். நீதிமன்ற வழக்குகள் தான் இதற்குத் தடையாக இருப்பதாக மத்திய அரசு கருதினால், அவை அனைத்தையும் விரைவாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; சமூக நீதியை காப்பாற்ற வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? - கமல்ஹாசன்