சென்னை:பிஇ, பிடெக் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு நடப்புக் கல்வியாண்டில் 22 ஆயிரத்து 671 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்கள் ஆறாம் வகுப்புமுதல் 12ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் படித்தார்களா என்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆன்லைன் மூலம் நடைபெற்றுவருகிறது.
மேலும் முதல்முறையாக இவர்களுக்குப் பொறியியல் படிப்பில் இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட முன்னணிப் பொறியியல் கல்வி நிறுவனங்களில் இவர்களுக்கும் இடங்கள் கிடைக்கும்.
சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள்
பொறியியல் படிப்பில் சேர ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் www.tneaonline.org, www.tndte.gov.in என்ற இணையதளங்களின் வாயிலாகத் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் விண்ணப்பங்களைப் பெற்றது. இதில், விளையாட்டு வீரர்கள் இரண்டாயிரத்து 426 பேர் உள்பட ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 930 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர்.
மேலும் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்திருந்த ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 930 மாணவர்களுக்கான சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) கடந்த 25ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் பள்ளிக் கல்வித் துறையின் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தின் மூலம் நடைபெற்றுவருகின்றன.