சென்னை:ஆயிரம் விளக்கு அஜிஸ் முல்லக் தெருவைச் சேர்ந்தவர் பிரியங்கா (22). இவர் கிண்டியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது அண்ணன் ரிஷிநாதன் (23). இந்த நிலையில் நேற்று (பிப்.10) இரவு பிரியங்கா, தனது அண்ணன் ரிஷிநாதன் உடன் இருசக்கர வாகனத்தில் ராயப்பேட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை அருகே வரும்போது, முன்னால் சென்ற மாநகரப் பேருந்தை ரிஷிநாதன் முந்திச் செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர் திசையில் வந்த அடையாளம் தெரியாத மற்றொரு இருசக்கர வாகனம், ரிஷிநாதனின் வாகனம் மீது உரசி உள்ளது. இதில் பின்னால் அமர்ந்து வந்த பிரியங்கா, நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்துள்ளார்.
கண்ணிமைக்கும் அந்த நேரத்தில் பின்னால் வந்த மாநகரப் பேருந்து, பிரியங்கா மீது ஏறி இறங்கி உள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர், படுகாயம் அடைந்த பிரியங்கா மற்றும் காயம் அடைந்த ரிஷிநாதனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரியங்கா, இரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேநேரம் ரிஷிநாதன் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர், பதிவு எண் இல்லாமல் விபத்து ஏற்படுத்தி விட்டுச் சென்ற பேருந்து மற்றும் இருசக்கர வாகனத்தைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:வாட்டர் ஹீட்டர் மூலம் மின்சாரம் பாய்ந்ததில் பச்சிளம் குழந்தையின் தாய் பரிதாபமாக பலி!