சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டிற்குச் செல்லும் விமானத்தில் பெரும் அளவில் கரன்சிகள் கடத்திக் கொண்டு செல்லப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது.
இதையடுத்து சுங்கத்துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டுவந்தனர். அப்போது, சென்னையில் இருந்து மலேசியா செல்லும் விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த சர்புதீன் அலி (58) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் அவரது உடமைகள் சோதனை செய்யப்பட்டது. அதில் துணிகளுக்கு நடுவே மறைத்து வைத்திருந்த அமெரிக்க டாலர்கள் கண்டறியப்பட்டது.
ரூ. 22 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் இவரிடம் இருந்து ரூ. 7 லட்சத்து 23 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை சுங்கத் துறையினர் கைப்பற்றினர். அதேபோல், துபாய் செல்ல இருந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த சென்னையைச் சேர்ந்த முகமது அப்துல் மஜீத் (31), முகமது யூசுப் அலி (32) ஆகியோரின் உடமைகளை சோதனை செய்தபோது குவைத், தினார், யூரோ கரன்சிகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து இவர்களிடம் இருந்து ரூ. 15 லட்சத்து 21 ஆயிரம் மதிப்புள்ள கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மூன்று பேரிடமும் இருந்து மொத்தமாக ரூ. 22 லட்சத்து 44 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தது ஹவாலா பணமா என்ற கோணத்தில் சுங்கத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:ஒரே நாளில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்! - சுங்கத் துறையினர் அதிரடி