இந்திய குடியுரிமை சட்டத்தை பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்க அனுமதி அளிக்காததை கண்டிக்கும் விதத்தில் திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகள் சட்ட பார்வையிலிருந்து வெளி நடப்பு செய்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராமசாமி, சட்ட மன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். மேலும் இதில் தமிழக அரசின் நிலைப்பாடு பற்றி விவாதிக்க வேண்டும் என்று கேட்டோம். ஆனால் இதில் அரசின் நிலைப்பாடு என்னவென்று தெளிவு இல்லை.
இது தொடர்பாக எந்த விவாதம் பேசக்கூடாது என்று பேரவை தலைவர் கூறுவது ஏற்றுக்கொள்ளப்படாது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் பற்றி விவாதிக்க தொடர்ந்து இதை வற்புறுத்துவோம். ஆனால் இதற்கு அனுமதி இல்லை என்று கூறும் இந்த அரசு தேவையா என்று சிந்திக்க வேண்டும்..இந்த விவகாரத்தில் எதிர்கட்சிகள் ஒன்றுப்பட்டு செயல்படும் என தெரிவித்தார்..
தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ அபூபக்கர் பேசுகையில், குடியுரிமை திருத்த சட்டத்தை பற்றி தமிழக அரசின் நிலைப்பாடு என்னவென்று விவாதிக்க அனுமதி இல்லை என்று கூறுகின்றனர். 15 க்கும் மேல் மாநிலங்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரிக்கவில்லை. ஆனால் அதிமுக அரசு பாஜக அடிமை போல் செயல்படுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாஜக உடன் எப்போதும் கூட்டணி இல்லை என்று தெரிவித்தர் ஆனால் அவருக்கு முரணாக அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்தை பற்றி விவாதிக்க அனுமதிக்கவில்லை என்பதை கண்டித்து சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம் என தெரிவித்தார்.