வெளிநாட்டிலிருந்து மதுபாட்டில்கள் கடத்திவருவதாகத் திருவல்லிக்கேணி காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து தீவிர வாகன சோதனையில் காவல் துறையினர் ஈடுபட்டனர். அப்போது, எல்லிஸ் சாலை சந்திப்பில் சந்தேகத்திற்கிடமாக வந்த ஆட்டோவை மறித்து காவல் துறையினர் சோதனை செய்தனர்.
அதில் 9 வெளிநாட்டு மது பாட்டில்கள், 2 பெட்டிகள் வெளிநாட்டு சிகரெட்டுகள் இருந்தன. அவற்றை காவல் துறை பறிமுதல் செய்தது. பின்னர் நடத்திய விசாரணையில், கொழும்பு பகுதியிலிருந்து சென்னைக்குக் கொண்டு வந்து அவற்றை விற்க முயன்றது தெரிய வந்தது.