சென்னை: தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இன்று (ஜூன் 27) சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி, 'பொறியியல் படிப்பு கிடைக்கவில்லை என்கிற ஏக்கம் மாணவர்களுக்கு இருக்கக்கூடாது என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
நடப்பு கல்வியாண்டில் (2022 - 2023) இருந்து பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், பொறியியல் இரண்டாம் ஆண்டில் சேர்ந்து கொள்ளலாம். 12ஆம் வகுப்பில் Vocational course படித்த மாணவர்கள், இந்த ஆண்டிலிருந்து அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகள், உள்ளிட்ட அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் 2 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் சேர்ந்து படிப்பதற்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்.
திருத்தி அமைக்கப்பட்ட மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டத்திற்கு பெற்றோரும் மாணவிகளும் மிகுந்த ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகிறார்கள். முதல் நாளில் 15,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஜூலை மாதத்தில் முதலமைச்சர் இந்த திட்டத்தை தொடங்கி வைப்பார்.
ஜூலை 18ஆம் தேதி முதல் கல்லூரி: வருகிற ஜூலை 18ஆம் தேதி முதல் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான அனைத்து கல்லூரிகளும் தொடங்கப்படும். மேலும், நேற்றைய முன்தினம் தமிழ்நாடு முதலமைச்சர் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ‘கல்லூரி கனவு’ என்னும் திட்டத்தின் மூலம் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான வாய்ப்பு குறித்த வசதிகளை செய்து கொடுக்க உயர் கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 1ஆம் தேதி நடைபெறவுள்ள ‘கல்லூரி கனவுத்திட்டம்’ நிகழ்ச்சியில் நான் பங்கேற்க உள்ளேன். தேசிய அளவில் தமிழ்நாட்டில் உயர்கல்வி விழுக்காடு 54% அதிகரித்துள்ளது. பொறியியல் கல்லூரிகளில் 85,902 பேர் விண்ணப்பித்து உள்ளனர். மாணவர் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட எல்லா இடங்களிலும் முழுமையாக நிரப்பப்படும்.
பக்ரீத் பண்டிகை வருகிற ஜூலை 10ஆம் தேதி என அரசு பதிவில் இருக்கிறது. ஆனால், இஸ்லாமியர்களின் கோரிக்கையை ஏற்று ஜூலை 11ஆம் தேதி பக்ரீத் வரும் பட்சத்தில், அண்ணா பல்கலைக்கழக 3 பாடப்பிரிவு தேர்வுகளில், அன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வேறு தேதியில் நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:11ஆம் வகுப்பு துணைத்தேர்விற்கு விண்ணப்பம்