சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்குக் கரோனா வைரஸ் தொற்று தொடர்பாக ஆலோசனைகளை வழங்கும் வகையில் செயல்பட்டுவரும் ஆலோசனை மையத்தை ஆணையர் பிரகாஷ் நேரில் சென்று ஆய்வுசெய்தார். ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தியளவில் தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்கள் மட்டும்தான் கரோனா வைரஸ் சம்பந்தமான தகவலையும் வெளிப்படையாக மக்களுக்கு அளித்துவருகின்றன.
சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்குப் பின் அதிக விழுக்காட்டில் குணமடைந்துள்ளனர். கரோனா வைரசைக் குணப்படுத்தும் மருந்து என சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம். தற்போது வைரசைக் குணப்படுத்துவதற்கான மருந்து, முகக்கவசம் அணிவதும், தகுந்த இடைவெளியைப் பின்பற்றுவதும்தான்.
வீடு வீடாக கரோனா பரிசோதனை மேற்கொண்டுவரும் மாநகராட்சிப் பணியாளர்களிடம் எந்தவித ஒளிவுமறைவுமின்றி அனைத்து விவரத்தையும் மக்கள் தெரிவிக்க வேண்டும். நோய்த் தொற்று தொடர்பான ஏதேனும் அறிகுறி இருந்தால் உடனடியாக அவர்களிடம் தெரிவிக்க வேண்டும். சென்னையிலுள்ள 15 மண்டலங்களிலும் ஆலோசனை மையங்கள் செயல்பட்டுவருகின்றன. அந்தந்த மண்டலங்களுக்கான தொலைபேசி எண்களை ஸ்டிக்கரில் அச்சடித்து சென்னையில் உள்ள வீடுகள் தோறும் ஒட்டப்பட்டுவருகிறது.