சென்னை:தமிழ்நாட்டில் இந்த மாதத்தில் 650 மினி கிளினிக் தொடங்கப்படும் எனவும், படிப்படியாக 2000 மினி கிளினிக் தொடங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரோனா பாதிப்பின் போது ரத்த பரிசோதனையை சிறப்பாக மேற்கொண்ட மருத்துவர்களுக்கு பாராட்டு தெரிவித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 5 லட்சத்திற்கும் மேல் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்துள்ளனர் என்பது மிகப்பெரிய வெற்றியாகும்.
'முதற்கட்டமாக 650 மினி கிளினிக் இந்த மாதம் தொடங்கப்படும்' - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அதேபோல் தாமதம் இல்லாத வார்டு தொடங்கப்பட்ட பின்னர் 10 ஆயிரம் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். இதுவரை 29 ஆயிரம் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். இந்தியாவில் தனி மருத்துவமனையில் அரசு மருத்துவமனை சாதனை புரிந்துள்ளது. 35 ஆயிரம் பேருக்கு கரோனா ரத்த பரிசோதனை செய்துள்ளனர். இந்த மருத்துவமனை சர்வதேச அளவில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கரோனா தொற்று தொடங்கிய காலத்தில் 10 படுக்கையுடன் தொடங்கப்பட்டு, முதல் நோயாளியை அனுமதித்து குணப்படுத்தி உள்ளனர்.
இந்த மருத்துவமனையில் 1,650 படுக்கைகள் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் இருந்து வந்துள்ள உருமாறிய கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 120 தனிப்படுக்கைகள் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்புடையவர்கள் என இதுவரையில் 1,438 பேரை பரிசோதனை செய்ததில் 13 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவர்களின் தனிக் கண்காணிப்பில் உள்ளனர். 13 பேருடன் தொடர்புடையவர்களையும் கண்டறிந்து தேடிவருகிறோம்.
புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆய்வகத்திற்கு இவர்களின் ரத்த மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. அவர்களுக்கு உருமாறிய வைரஸ் தாக்கி உள்ளதா? என்பது பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர்தான் தெரியவரும். ஏற்கெனவே, கரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்வர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைதான் அளித்து வருகிறோம். உருமாறிய வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை, பதப்படத் தேவையில்லை. உலகமே பதட்டமாக இருந்த காலத்திலும் தமிழ்நாடு அரசு நம்பிக்கை ஊட்டியது.
தற்போது, உருமாறிய கரோனா வைரஸ் வந்துள்ளது. இங்கிலாந்தில் இளைஞர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்ததால்தான் உருமாறிய கரோனா வைரஸ் பரவியது. தமிழ்நாட்டில் பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி முகக்கவசம் அணிய வேண்டும். கரோனா தடுப்பூசி வழங்க ஆயுத்தப்பணிகள் மக்கள் நல்வாழ்வு துறையில் நடைபெறுகிறது. முதலமைச்சரின் உத்தரவின் படி கட்டணம் இல்லாமல் தடுப்பூசி வழங்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
எல்லோரும் நிலையான வழிமுறைகள் பின்பற்றினால் பொது முடக்கம் போடுவதற்கான வாய்ப்புகள் நிச்சயம் ஏற்படாது. நாளை சுகாதார வல்லுநர்களுடனும், மாவட்ட ஆட்சியருடன் முதலமைச்சர் கலந்தாய்வு நடத்துகிறார். உலக சுகதாரத்துறையில் இருந்தும் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டில் ஏற்கெனவே இ-பாஸ் நடைமுறை உள்ளதால் இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களை கண்காணிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
புதிய அம்மா மினி கிளினிக் சூப்பர் ஹிட் திட்டம். இது கிராமங்களில் அதிகளவில் வரவேற்பை பெற்றுள்ளது. அம்மா மினி கிளினிக் வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வந்துக் கொண்டுள்ளன. இந்த மாதத்தில் 650 மினி கிளினிக் முதல் கட்டமாக தொடங்கப்படும். 835 மருத்துவர்கள் இந்த வாரம் நியமிக்க உள்ளோம். படிப்படியாக 2,000 மினிகிளினிக் தொடங்கப்படும். மினகிளினிக் காலையில் 8 மணி முதல் 12 மணி வரையிலும், கிராமப்புறங்களில், மலைப் பிரதேசஙங்களில் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், நகர்புறங்களில் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் செயல்படும்" என்றார்.
இதையும் படிங்க:உருமாறிய கரோனா வைரஸ் - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் ஆலோசனை