சென்னை: தாம்பரம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வெளி மாநிலங்களிலிருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்வோரைக் கண்காணித்து அவர்களைக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தாம்பரம் மதுவிலக்கு போலீசார் தனிப்படைகள் அமைத்து தாம்பரம் மாநகர காவல் எல்லை முழுவதும் கஞ்சா விற்பனை செய்பவர்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஒடிசா மாநிலத்திலிருந்து ரயில் மூலம் தாம்பரத்திற்கு மூட்டை மூட்டையாக கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு போலீசார் தாம்பரம் ரயில் நிலையத்தில் வெளி மாநிலங்களிலிருந்து வரும் அனைத்து ரயில் பயணிகளிடமும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒடிசா மாநிலத்தில் இருந்து தாம்பரம் வந்த ரயிலில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையின் போது அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்து உள்ளார். ஆகவே போலீசார் அவரின் உடைமைகளைச் சோதனை செய்து உள்ளனர். சோதனையில் மூட்டை மூட்டையாக கஞ்சா கடத்தப்பட்டு வந்தது தெரிய வந்தது.
இதை அடுத்து அந்த நபரிடம் இருந்து சுமார் 19 கிலோ எடை உள்ள கஞ்சாவை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் மதுவிலக்கு போலீசார் அந்த நபரை காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர். விசாரணையில் அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் (வயது 27) என தெரிய வந்தது.
மேலும் இவர் பல மாதங்களாக ஒடிசா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ரயில் மூலமாக கஞ்சாவை கொண்டு வந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில்லறை விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. பின்னர் முகமது ரிஸ்வான் மீது மதுவிலக்கு அமலாகப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
அதனை அடுத்து ரிஸ்வானை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்து உள்ளனர். மேலும் தாம்பரம் மாநகர காவல் எல்லையில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சாவை ரயில் மூலமாக கொண்டு வந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விற்பனை செய்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:வங்கிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் மொபைல் எண்களுக்கு குறி.. நைஜீரிய சைபர் கிரைம் கும்பல் சிக்கியது எப்படி?