சென்னை பல்லவன் சாலையில் இயங்கி வரும் கரோனா பரிசோதனை மையத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 15 மண்டலங்களில் நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அலுவலர்களுடன் நோய்க் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
கரோனா அறிகுறி இருப்பவர்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டு, முடிவு வருவதற்கு இரண்டு நாள்கள் ஆகிறது. அதற்குள் அவர்களுக்குத் தொற்று இருந்தால் மற்றவர்களுக்குப் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. இதனால், அறிகுறி இருப்பவர்களை கரோனா பாதிக்கப்பட்டவர் எனக் கருதி அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும்.
கரோனா பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அறிகுறி உள்ளவர்கள் ஒரே வீட்டில் இருக்கவேண்டாம் என்றும்; அருகிலுள்ள கரோனா பாதுகாப்பு மையத்திற்குச் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும், இதுதொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அலுவலர்களுக்குக் கூறினார்.
மேலும் மருத்துவப் படிப்பு இறுதி ஆண்டு படிப்பவர்கள், 200 நபர்கள் பணிக்கு எடுக்கப்பட்டு, 15 மண்டலங்களிலும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க உள்ளோம்.
மக்கள் முகக் கவசம், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும்; அவர்கள் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே ஊரடங்கு சற்று பயன்தரும் என்றும் கூறினார்.