சென்னை:ஆலந்தூரில் உள்ள ஆபிரகாம் தெருவில் நேற்று(அக்.10) இரவு 8 மணியளவில் 30க்கும் மேற்பட்ட இளைஞர் கும்பல் போதையில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் வந்தனர். அங்கு சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை அடித்து நொறுக்கினர்.
இதைக்கண்ட பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். பின்னர் அந்தக்கும்பல் ஆபிரகாம் தெருவைச்சேர்ந்த நவீன்(28) என்பவரை சரமாரியாக தலை, முதுகு, இடுப்புப்பகுதியில் வெட்டினர். மேலும், அங்கிருந்த சாமியார் ஒருவரின் சமாதியில் பெட்ரோல் குண்டையும் வீசினர்.
இது பற்றி தகவலறிந்ததும் ரோந்து காவல் துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த போது ஆயுதங்களை ஏந்தி வந்த கும்பல் சிதறி ஓடினர். அந்த கும்பலை காவல்துறையினர் பிடிக்க முயன்றபோது அவர்களை நோக்கி பெட்ரோல் குண்டை வீசி விட்டுத் தப்பிச்சென்றனர். இது தொடர்பாக தகவலறிந்ததும் மடிப்பாக்கம் உதவி ஆணையர் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
மேலும், சம்பவத்தில் ஈடுபட்ட ரவுடிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியும், காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தென் சென்னை மாவட்டத் துணைத்தலைவருமான நாகூர் மீரான் (32) என்பவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை வழக்கில் ராபின்சன் மற்றும் அவரது கூட்டாளிகள் என 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், நாகூர் மீரானின் கூட்டாளி வீரா, ராபின்சனின் தங்கை ஜெரினா மற்றும் அவரது காதலன் அனில் ஆகியோரை கிண்டியில் வைத்து கடத்திச்சென்று வேளச்சேரியில் அடித்து இறக்கிவிட்டதும் தெரியவந்தது. பின்னர் ஜெரினாவும், அனிலும் நாகூர் மீரான் கூட்டாளிகள் கடத்திவிட்டதாக ராபின்சனின் கூட்டாளி சஞ்சய் என்பவரிடம் தெரிவித்ததால், சஞ்சய் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் கத்தி, கட்டை போன்ற ஆயுதங்களோடு ஆபிரகாம் தெருவுக்குள் நுழைந்து கண்ணில் பட்ட பொருட்களையும், கண்ணில் தென்படுவோரை எல்லாம் வெட்டியுள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்த வன்முறையில் அபுபக்கர் , சஜின், நவீன் ஆகிய மூன்று பேர் காயம் அடைந்து ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 ஆட்டோக்கள், 5க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறை காரணமாக அப்பகுதியே பெரும் பரப்பரபாக காணப்பட்டது. அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் இரவு நேரங்களில் 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இந்த வன்முறை தொடர்பாக ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சஞ்சய், அனில் மற்றும் அவரது கூட்டாளிகள் என மொத்தம் 19 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க அம்பேத்கர் நகர் மற்றும் ஆபிரஹாம் தெரு பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆலந்தூரில் பெட்ரோல் குண்டு வீச்சு ; 19 பேர் கைது இதையும் படிங்க: தமிழ்நாடு காவல்துறையின் 'ஆப்ரேசன் மின்னல் ரவுடி வேட்டை' - 72 மணிநேரத்தில் 3,095 ரவுடிகள் கைது