சென்னை: சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் 30 வயது பெண். இவருக்கு 13 வயதில் மகள் உள்ளார். பெண்மணி கடந்த ஆறாம் தேதி மதுரையில் உள்ள உறவினர் வீட்டு இறுதி சடங்கிற்கு சென்றுள்ளார். அப்போது தனது 13 வயது மகளை வீட்டில் விட்டுவிட்டு பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றதாக தெரிகிறது.
ஒன்பதாம் தேதி இரவு மதுரை சென்ற பெண்மணி சென்னை வீட்டிற்கு வந்து பார்த்தபோது சிறுமி வீட்டில் இல்லை. பின்னர் அக்கம் பக்கத்தில் விசாரித்த போது அவர்கள் தங்களுக்கு தெரியாது எனக் கூறியதால் பல இடங்களில் தேடியுள்ளார். எங்கும் கிடைக்காததால் சிறுமியை காணவில்லை என அவரது தாயார் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமியின் செல்போனை தொடர்பு கொண்டு பேசிய போது, அதில் பேசிய நபர் சிறுமியை கொண்டு வந்து விடுவதாக தெரிவித்துள்ளார். அதன் பிறகு சிறுமியை கடந்த பத்தாம் தேதி அயனாவரம் போக்குவரத்து டிப்போ அருகே அந்த நபர் சிறுமியை விட்டுச் சென்றுவிட்டார்.
பின்னர் சிறுமியை மீட்ட போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், "இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வியாசர்பாடியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழகியதும், வீட்டில் ஆள் இல்லை என்று தெரிந்ததும் சிறுமியை அந்த நபர் வந்து அழைத்துச் சென்று அவரது வீட்டில் தங்க வைத்ததும் தெரியவந்தது. மேலும் சிறுமிக்கு குறிப்பிட்ட அந்த நபர் பாலியல் தொந்தரவு கொடுத்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த நபரை அழைத்து விசாரணை நடத்தியபோது அவர் 17 வயது சிறுவன் என தெரியவந்துள்ளது" பின்னர் அந்த சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: H3N2 வைரஸ் பரவலை தடுப்பது எப்படி? பாதிப்பு குறைவது எப்போது? - நோய்த்தொற்று சிகிச்சை மருத்துவர் மதுமிதா