தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்- அமைச்சர் சி.வி. கணேசன் - குழந்தை தொழிலாளர்கள்

சென்னை: தமிழ்நாட்டில் கடந்தாண்டில் 156 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு , பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்துள்ளார்.

'மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்'- அமைச்சர் சி.வி. கணேசன்
'மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்'- அமைச்சர் சி.வி. கணேசன்

By

Published : Jun 12, 2021, 3:54 AM IST

குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி உலகளவில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலும் தமிழ்நாட்டிலிருந்து அகற்றும் வகையில் மாநில அளவிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி தொழிலாளர் துறையின் சார்பாக நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் கலந்து கொண்டு, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான வாசகங்கள் கொண்ட ராட்சத பலூன் பறக்கவிட்டும், குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்த உறுதிமொழியையும் எடுத்தார்.

மேலும், குழந்தைகளை ஒருபோதும் எவ்வித வேலைகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் மற்றும் அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் என்ற உறுதிமொழியை பொதுமக்கள் ஏற்கும் வகையில் கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி வைத்தார்.

ஆணையர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு குழந்தைத் தொழிலாளர்கள் அகற்றுவதற்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை கீழ்கண்டவாறு பட்டியலிட்டார்.

* தமிழ் நாட்டை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக்க உருவாக்க பல்வேறு திட்டங்கள் வகுத்து செயல்படுத்த அலுவலர்களுக்கு உரிய உத்தரவுகள் வழங்கப்பட்டு செயலாக்க நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

* குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றிட உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு குழந்தை தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) விதிகள், மாநில செயல்திட்டம் ( State Action Plan ) மற்றும் நிலையான இயக்க நடைமுறைகள் (Standard Operating Procedure) ஆகியவற்றை துறை அலுவலர்கள் பின்பற்றி தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொண்டு குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்துதலை தடுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.

* குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள், உரிமையாளர்களுக்கு மேற்படி சட்டத்தின்படி குறைந்தபட்சம் 20ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இல்லையெனில் இரண்டாண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அவை இரண்டும் நீதிமன்றத்தால் தண்டனையாக விதிக்கப்படும்.

* கடந்தாண்டில் குழந்தைத் தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின்படி 26ஆயிரத்து 990 ஆய்வுக மேற்கொள்ளப்பட்டு, 156 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு , பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

* குழந்தைத் தொழிலாளர் பணியில் அமர்த்தப்பட்டால் அதுகுறித்து புகார் அளித்திட மாநில அளவில் கட்டணமில்லா தொலைபேசி ( Child Help line ) 1098 ஏற்படுத்தப்பட்டுள்ளது.

* பொதுமக்கள் குழந்தைத் தொழிலாளர் பணிபுரிவது கண்டறியப்பட்டால் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் அளிக்க வேண்டும்.

* மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களை தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்பு பயிற்சி பள்ளியில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு கல்வி உபகரணங்கள், இலவச சீருடை, இலவச மருத்துவ பரிசோதனை, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் 500 ரூபாய் கல்வி உதவித் தொகையாக 2020 - 21ஆம் கல்வியாண்டில் 474 மாணவர்களுக்கு 28.44 லட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

* இதுவரை 4ஆயிரத்து 438 குழந்தைத் தொழிலாளர்கள் மேற்படி பள்ளிகளில் படித்து வருவதாக தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு செயலர் கிர்லோஷ் குமார், தொழிலாளர் முனைவர் மா. வள்ளலார், தொழிலாளர் துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details