சென்னை : திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு லாட்ஜில், ரூம் எடுத்து சந்தேகப்படும்படியாக சிலர் தங்கி வருவதாக திருவல்லிக்கேணி காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் திருவல்லிக்கேணி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து 14 நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பழைய வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த சரத்குமார் (25), பரத் குமார், சாய் காந்த் (19) மற்றும் 11 பள்ளி மாணவர்கள் என்பது தெரியவந்தது. மேலும், கடந்த 2021ஆம் ஆண்டு ஐஸ் அவுஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விக்கி என்கிற கஞ்சி விக்கி என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இதில், பழிக்கு பழி வாங்குவதற்காக இந்த 14 பேரும் கொலை செய்ய திட்டமிட்டிருப்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் குறிவைத்த நபர் திருவல்லிக்கேணி பகுதிக்கு வர இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் 14 நபர்களும் லாட்ஜில் தங்கி இருந்தது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவர்களிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சா, இரண்டு கத்தி, ஒரு வீச்சரிவாள், ஒரு கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:பகீர் வீடியோ... கண்ணிமைக்கும் நேரத்தில் செயின் பறிப்பு...