சென்னை: பாராளுமன்றத்தில் ராஜ்மோகன் உன்னிதன் (RAJMOHAN UNNITHAN), பைனி பேகனன் (BENNY BEHANAN) ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல் அளித்துள்ளார்.
அதில், ”கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால் கல்வி நிறுவனங்களை மத்திய , மாநில அரசுகள் நிர்வாகம் செய்து வருகின்றன. மாநிலப் பல்கலைக் கழகங்களில் படிக்கும் மாணவர்களில் இறந்தவர்களின் விவரம் இல்லை. ஒடிசா மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு மாணவர் மட்டுமே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேலும் 2017 முதல், 2021 முறையான காலகட்டங்களில் விபத்துகள் மற்றும் தற்கொலைகள் காரணமாக என்ஐடி, ஐஐடி, எய்ம்ஸ், மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் 13 ஆயிரத்து 89 மாணவர்கள் உயிரிழந்திருப்பதாக தேசியக் குற்ற ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் மாணவர்கள் 7,396 பேர், மாணவிகள் 5 ஆயிரத்து 693 பேர். தமிழ்நாட்டில் 2018 முதல் தற்போது வரை 10 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மேலும் தற்கொலைகளை பொறுத்தவரை, 2018 முதல் தற்போது வரை ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக நாடு முழுவதும் 20 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள ஐஐடி, திருச்சி என்ஐடி மற்றும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் 10 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.