தமிழ் சினிமாவின் தரம் குறையாமல் அதன் பாதை யதார்த்தத்தை நோக்கிச் செல்ல வேண்டுமென்பதில் உறுதியுடைய இயக்குநர்கள் வரிசையில் இருக்கும் பாலா, அமீரிடம் உதவி இயக்குநராக இருந்த சசிகுமார் இயக்குநராக அறிமுகமான திரைப்படம் 'சுப்ரமணியபுரம்'.
இத்திரைப்படம் மூலம் 80-களின் மதுரை மனிதர்கள், வாழ்வியல் என அனைத்தையும் அடுத்த தலைமுறைக்கு காட்சிப்படுத்தினர் இயக்குநர் சசிகுமாரும் சுப்ரமணியபுரப் படையினரும்.
திரைப்படங்களில் சில, வரலாறு பேசும்; இல்லை வரலாற்றில் பேசப்படும். சுப்ரமணியபுரம் மேற்கூறிய இரண்டிலும் இருக்கும்.
தமிழ்த் திரைப்படங்களில் வடசென்னைவாசிகள் என்றால், ரவுடிகள் என்று எப்படி முத்திரை இருந்ததோ அதுபோல் மதுரைக்காரர்கள் என்றால் ரவுடிகள்தான் என்ற முத்திரையும் பொதுவாக இருந்தது.
குத்தப்பட்ட முத்திரையை திருத்தி முத்திரைக்குப்பின் இருக்கும் அதிகாரவர்க்கத்தினரின் அரசியலை புதுப்பேட்டை, மெட்ராஸ் போன்ற வட சென்னையை மையப்படுத்தி வந்த சில திரைப்படங்கள் அம்பலப்படுத்தின.
அதுபோல் 13 வருடங்களுக்கு முன்னர் மதுரையை மையப்படுத்தி வந்த சுப்ரமணியபுரம், அதிகாரம் படைத்தவர்களின் சுயநலத்துக்காக சில இளைஞர்கள் எப்படிக் கத்தி தூக்கி, எப்படி அழிந்துபோகிறார்கள் என்பதை திருத்தமாக சொன்ன திரைப்படம்.
அழகர், பரமன், கனகு, துளசி, காசி, டும்கன், டோப்பன், சித்தன் என வைக்கப்பட்ட கதாபாத்திரப் பெயர்களில் இருந்து முரட்டுக்காளை படத்தின் முதல் நாள் முதல் காட்சி, ரஜினிக்கு வைக்கப்பட்ட கட் அவுட் என சசிகுமாரின் உழைப்பு இத்திரைப்படத்தில் மிரள வைத்திருக்கும்.
முக்கியமாக இளையராஜாவின் இசையைப் பயன்படுத்திய விதம். 'சிறு பொன்மணி அசையும்' பாடலுக்கு சசிகுமார் அமைத்த காட்சியமைப்பை அந்தப் பாடலின் ஒரிஜினல் வெர்ஷனுக்கே கூட பயன்படுத்திக்கொள்ளலாம்.
இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்துவது சமீபத்தில் தமிழ் சினிமாவில் அதிகரித்தது. ஆனால் அதற்கான முதல் பாதையை எவ்வித சொதப்பலும் இல்லாமல் போட்டது, சுப்ரமணியபுரம்.
பூட்டிய வீட்டின் முன் சவுண்ட் விடுவது,' உனக்கெல்லாம் ஒரு பீடி கடனா கொடுப்பானா', 'என்ன சித்தா சவுண்ட் எப்டி... ம்ம் வீடு வரைக்கும் கிழியுது' என நகைச்சுவை காட்சிகளும் இயல்பை மீறாமல் வெகு யதார்த்தமாக இருக்கும்.
ஒரு முரடன் எழுதிய கவிதை போல் திரைப்படம் இருந்தது என்றால், அந்த கவிதைக்கு ஜேம்ஸ் வசந்தன் கொடுத்த இசை இன்னொரு வண்ணம்.
'கண்கள் இரண்டால்' பாடல் மனதுக்குள் காதலுக்கு விதை தூவும், 'மதுர குலுங்க குலுங்க' பாடல் ஆடவைக்கும், சுப்ரமணியபுரம் தீம் மியூசிக் பரபரக்க வைக்கும், 'காதல் சிலுவையில் அறைந்தாள் என்னை' பாடல் அச்சத்தையும், அமைதியையும் கொடுக்கும்.
சிறிது பழகியவர்கள் துரோகம் செய்தாலே ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலை அனைவருக்கும் இருக்கும். ஆனால், அழகருக்கோ அவன் காதலியை வைத்தே துரோகம் இழைக்கப்பட்டிருக்கும்.
அதேபோல், பீடி திருட சென்று மாட்டி சிறைக்குள் செல்ல வேண்டிய காசியையும், டோப்பனையும் வெளியே எடுக்க அழகர், பரமன் சொல்லி கடைக்கார அண்ணாச்சியை டும்கா அழைத்து வருவான்.
பீடிக்காக முடிந்திருக்க வேண்டிய காசியின் வாழ்க்கையை மீட்ட பரமனுக்கு துரோகம் செய்த காசி, பீடியை இழுத்து சுவாசத்தை விடுகையில் அதில் துரோக விஷம் அப்பியிருந்தது.
'பழக்கம் பழக்கம்னு சொல்லிதான்யா நம்ம ஆளு பல பேரு கத்திய தூக்குறாங்க, பழக்கம் பழக்கம்னே வாழ்க்கைய தொலைச்சிட்டோம்' என்ற வசனங்கள் மூலம் எங்கு கத்தி தூக்கப்பட்டாலும், அந்த கத்திக்கு பின்னால், பழகியவர்களும், அவர்கள் செய்த துரோகங்களும் சங்கிலிபோல் தொடரும் என்பது எந்தவித அலட்டலும் இல்லாமல் சொல்லப்பட்டிருக்கும்.
தங்களது அதிகார லாபத்திற்காக அழகரையும், பரமனையும் கனகு கத்தி தூக்க வைத்து துரோகம் செய்தது, அழகர் நம்பி பழகிய காதலி மூலம் அவனைக் கொன்றது, அழகரின் கொலைக்குப் பழி வாங்கிய பரமனை அவனது நண்பன் காசியை வைத்துக் கொன்றது எனத் தொடரும் அந்தச் சங்கிலி கடைசியாக மாற்றுத்திறனாளி டும்கன் கையில் வந்து நிற்கும்.
மருத்துவமனைக்கு வரும் டும்கன் தங்களுக்குத் துரோகம் செய்த காசியின் சுவாசக் காற்றை நிறுத்தி அத்துரோக சங்கிலியை அறுத்தெறிந்திருப்பார்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், மனிதனுக்கு மனிதன் துரோகம் செய்து பழகி அது சங்கிலி போல் நம்மை சுற்றிக்கொண்டிருக்கும் நிலை வந்து அதிக காலம் ஆகிவிட்டது. அந்த சங்கிலி துரோகம் செய்தவர்களின் கழுத்தையே எப்படி நெரிக்கும் என்பதற்கு சுப்ரமணியபுரம் சாட்சி.