சென்னை:தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 8ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்கள், விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்தது. அதன்படி, மாணவர்கள் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்திருந்தனர்.
இந்த நிலையில் அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா இன்று (மே.29) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த மாணவர்கள், விடைத்தாள் நகலை மே 30ஆம் தேதி மதியம் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து, விண்ணப்பித்த படங்களுக்குரிய விடைத்தாள் நகலை பெற்றுக் கொள்ளலாம்.
விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீட்டிற்கு அரசு தேர்வு துறையின் இணையதளத்தில் இருந்து விண்ணப்பித்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து இரண்டு நகல்கள் எடுத்து மே 31ஆம் தேதி மதியம் முதல் ஜூன் 3ஆம் தேதி மாலை 5 மணி வரை சம்மந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கான கட்டணத்தை மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும்.