அரசு தேர்வுத்துறை இயக்கம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் செய்முறை தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.
பள்ளி தலைமையாசிரியர்கள் ஜனவரி 27ஆம் தேதி முதல் பிப்ரவரி 12ஆம் தேதி வரை பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான வெற்று மதிப்பெண் பட்டியல்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் பொதுப் பிரிவு மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகளை புதிய பாடத்திட்டத்தின்படி பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையிலான நாட்களில் கண்டிப்பாக நடத்த வேண்டும்.
உயிரியல் பாட செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல்கள் உயிரி தாவரவியல் மற்றும் உயிரி விலங்கியல் பாடங்களில் செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியர்கள் செய்முறை தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்வதற்கான வெற்று மதிப்பெண் பட்டியலை ஜனவரி 27ஆம் தேதி முதல் பிப்ரவரி 12ஆம் தேதி வரை அரசு தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பிப்ரவரி மூன்றாம் தேதி முதல் 13ஆம் தேதிக்குள் செய்முறை தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.
இயற்பியல் ,வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், புள்ளியியல், கம்ப்யூட்டர் அறிவியல், உயிரிவேதியியல், நுண்ணுயிரியல், நர்சிங் பொது, உணவு மற்றும் ஊட்டச்சத்துவியல் உள்ளிட்ட தொழிற் பாடங்களுக்கும் செய்முறை தேர்வு நடத்த வேண்டும். செய்முறை தேர்விற்கான மதிப்பெண் பட்டியல்களை இணையதளம் வாயிலாக பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 27ஆம் தேதிக்குள் அரசு தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 14ஆம் தேதி முதல் 25ஆம் தேதிக்குள் பொதுப் பிரிவு மற்றும் தொழிற் பாடங்களுக்கான செய்முறை தேர்வினையும் நடத்திட வேண்டும் என அரசு தேர்வுத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.