தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடங்கியது 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: தேர்வெழுதும் 8 லட்சம் மாணாக்கர்கள் - 113 புதிய தேர்வு மையங்கள்

சென்னை : தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று தொடங்கி நடைபெற்றுவரும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் எழுதிவருகின்றனர்.

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

By

Published : Mar 4, 2020, 10:56 AM IST

தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கி வரும் 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வினை 8 லட்சத்து 32 ஆயிரத்து 475 பேர் எழுதுகின்றனர்.

2019-20 ஆம் கல்வியாண்டிற்கான 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள், இன்று (மார்ச் 4ஆம் தேதி) தொடங்கி 26ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி 15 நிமிடம் வரை நடைபெறும் இத்தேர்வினை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 7,400 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து, 8 லட்சத்து 26 ஆயிரத்து 119 மாணவர்களும், தனித்தேர்வர்கள் 6,356 பேரும் என 8 லட்சத்து 32 ஆயிரத்து 475 பேர் புதியப் பாடத்திட்டத்தில் எழுதவுள்ளனர்.

இந்தத் தேர்விற்காக இந்தாண்டு கூடுதலாக 113 புதிய தேர்வு மையங்கள் உள்பட, தமிழ்நாடு, புதுச்சேரியில் 3,016 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழ் வழியில் பயின்று எழுதவுள்ள 4,38,988 பேருக்கு தேர்வு கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு புதுச்சேரியில் 11 ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று துவக்கம்

வேலூர், கடலூர், சேலம், கோயம்புத்தூர் , மதுரை, புதுக்கோட்டை, பாளையங்கோட்டை, திருச்சி, புழல் ஆகிய சிறைகளிலுள்ள 100 ஆண் சிறைவாசிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ளனர். மேலும் 3,175 மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு தேர்வெழுத கூடுதலாக ஒருமணி நேரம் உள்பட விதிகளின் அடிப்படையில் சலுகைகள் அரசுத் தேர்வுத்துறையால் வழங்கப்பட்டுள்ளன.

அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் அலுலவலகத்தில், பொதுத் தேர்வுகள் தொடர்பாக மாணவர்கள், தேர்வர்கள், பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துகள் சந்தேகங்களை தெரிவிக்க, முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுக் காலங்களில் காலை 8 முதல் இரவு 8 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறையினை, 9385494105 , 9385494115, 9385494120 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:ராஜ்யசபா தேர்தல்... யாரை நிறுத்தப் போகிறது அதிமுக?

ABOUT THE AUTHOR

...view details