தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மார்ச் 4இல் தொடங்கும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு!

சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் 4 ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வினை 8 லட்சத்து 32 ஆயிரத்து 475 பேர் எழுதுகின்றனர் என அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி தெரிவித்துள்ளார்.

8 லட்சம் மாணவர்கள் எழுதும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு துவக்கம்!
8 லட்சம் மாணவர்கள் எழுதும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு துவக்கம்!

By

Published : Mar 2, 2020, 5:06 PM IST

Updated : Mar 2, 2020, 5:48 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”2019-2020ஆம் கல்வியாண்டிற்கான 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள், மார்ச் 4ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி 15 நிமிடம் வரை நடைபெற உள்ளது. இத்தேர்வினை, தமிழ்நாடு, புதுச்சேரியில் 7,400 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 8 லட்சத்து 26 ஆயிரத்து 119 மாணவர்கள், 6,356 தனித்தேர்வர்கள் என 8 லட்சத்து 32 ஆயிரத்து 475 பேர் புதிய பாடத்திட்டத்தில் எழுதவுள்ளனர். கடந்த மார்ச், ஜூன் 2019ஆம் ஆண்டில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறாமல், தற்பொழுது 12ஆம் வகுப்பு படித்துவரும் 50,650 பள்ளி மாணவர்களும் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் தற்பொழுது நடைபெறும் (மார்ச் 2020 ) தேர்வின்போது எழுத உள்ளனர்.

ஏற்கனவே பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி தேர்ச்சி பெறதாவர்கள் தற்பொழுது பழைய பாடத்திட்டத்தில் 3,195 பேர் எழுத உள்ளனர். இந்தத் தேர்விற்காக இந்தாண்டு கூடுதலாக 113 புதிய தேர்வு மையங்கள் உள்பட, தமிழ்நாடு, புதுச்சேரியில் 3,016 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழ் வழியில் பயின்று எழுதவுள்ள 4,38,988 பேருக்கு தேர்வு கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள 411 பள்ளிகளில் படித்த 46,779 மாணவர்கள் 159 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். அதேபோல் புதுச்சேரியில் உள்ள 151 பள்ளிகளில் படித்த 14,779 மாணவர்கள் 40 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். முக்கியப் பாடங்களை மாணவர்கள் படிப்பதற்குத் தேவையான இடைவெளி அளிக்கப்பட்டுள்ளது. பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு தனியாகத் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான விடைத்தாளின் விவரங்கள் அடங்கிய முகப்புத் தாள் பிங்க் நிறத்தில் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்விற்காக சுமார் 44,500 ஆசிரியர்கள், அறைக் கண்காணிப்பாளர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வேலூர், கடலூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, புதுக்கோட்டை, பாளையங்கோட்டை, திருச்சி, புழல் ஆகிய சிறைகளிலுள்ள 100 ஆண் சிறைவாசிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ளனர். மேலும் 3,175 மாற்றுத்திறனாளித் தேர்வர்களுக்கு தேர்வெழுத கூடுதலாக ஒருமணி நேரம் உள்பட விதிகளின் அடிப்படையில் சலுகைகள் அரசுத் தேர்வுத்துறையால் வழங்கப்பட்டுள்ளன.

தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம், கழிப்பிட வசதிகள் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்கள், வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் ஆயுதம் தாங்கிய காவல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களைப் பார்வையிடுவதற்காக 4,000 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பறக்கும் படையினர் மாணவிகளைச் சோதனை செய்ய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. பெண் தேர்வர்களைப் பெண் ஆசிரியர்களை கொண்டு மட்டுமே சோதனை செய்ய வேண்டும். சந்தேகப்படும் தேர்வர்களை மட்டும் சோதனை செய்தால் போதும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் ஆகியோரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வின்போது தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போன் எடுத்து வர தேர்வர்கள், தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்வின்போது ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்வு மையத்திற்குள் அந்தப் பள்ளியின் ஊழியர் யாரும் காலை 8:30 மணிக்கு மேல் இருக்கக் கூடாது. தேர்வு முடிந்து விடைத்தாள் கட்டுகள் சென்ற பின்னர்தான் பள்ளிக்குச் செல்ல வேண்டும்.

தேர்வு அறைகளாக ஒதுக்கப்பட்ட பகுதியில் வகுப்புகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் அலுலவலகத்தில், பொதுத்தேர்வுகள் தொடர்பாக மாணவர்கள், தேர்வர்கள், பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துகள், சந்தேகங்கள் ஆகியவற்றைத் தெரிவிக்க, முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுக் காலங்களில் காலை 8 முதல் இரவு 8 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறையினை, 9385494105, 9385494115, 9385494120 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Last Updated : Mar 2, 2020, 5:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details