சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர் விஜயபாஸ்கர். இவர் வருமானத்திற்கு அதிகமாக 55 விழுக்காடு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக ஜூலை 22ஆம் தேதி எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய 26 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 25.56 லட்சம், காப்பீட்டு நிறுவன முதலீடு உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்தச் சோதனையின் அடிப்படையில் எம்.ஆர் விஜயபாஸ்கர், அவரது மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
11 மணி நேர விசாரணை
கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்த எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு, லஞ்ச ஒழிப்புத்துறையினர் சார்பில் சம்மன் அளிக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்று ஏற்கனவே ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜராகி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் நேற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விசாரணைக்கு ஆஜராகினார்.
அவரிடத்தில் மொத்தமாக 11 மணி நேரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்ட பணம் வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்டுள்ளதா உள்ளிட்ட பல்வேறு வினாக்கள் விஜயபாஸ்கரிடத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.