தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 17, 2020, 12:45 PM IST

Updated : May 17, 2020, 2:55 PM IST

ETV Bharat / state

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து வரும் மாணவர்களுக்கு சிறப்பு மையம்?

சென்னை: கரோனா வைரஸ் பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியிலிருந்து, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவரும் மாணவர்களுக்கு சிறப்பு மையம் அமைக்க வேண்டும் என அரசு தேர்வுத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

சிறப்பு தேர்வு மையம்
சிறப்பு தேர்வு மையம்

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்காரணமாக மார்ச் இறுதி வாரத்தில் நடைபெறவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ஜூன் 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பொதுத் தேர்வு நடத்துவது குறித்த ஆலோசனைகளை பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வழங்கினார். அதனடிப்படையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தேர்வு நடத்துவதற்கு பல்வேறு வழிகாட்டு முறைகளை தலைமையாசிரியர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

மாணவர்கள் தேர்வெழுத தகுந்த இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஒரு வகுப்பிற்கு 10 பேர் மட்டுமே அமர வைக்க வேண்டுமென அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள தேர்வு மையங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும். இந்தப் பகுதியில் இருக்கும் மாணவர்கள் தேர்வு எழுத சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும்.

பள்ளிக்கல்வி இயக்ககம்

தேர்வு மையத்தினை தேர்வு நடைபெறும் ஒவ்வொரு நாளும் கிருமிநாசினி கொண்டு தூய்மை செய்ய வேண்டும். தேர்வு மையங்களில் மின்சாரம் குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதிகள் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் வைத்து இருத்தல் வேண்டும். தேர்வு எழுதவரும் அனைத்து மாணவர்களும் கட்டாயம் முககவசம் அணிந்து இருத்தல் வேண்டும். மேலும் கைகளை சோப்பு அல்லது சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்கப்படுகிறது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் தற்போது தான் படிக்கும் மாவட்டத்தில் இருப்பதை பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். சொந்த மாவட்டத்தில் இல்லாமல் வேறு மாவட்டத்தில் இருந்தால் இ-பாஸ் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்து அதன் விவரங்களை மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். மேலும் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட அல்லது தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மாணவர்கள் விவரம், பள்ளியில் தேர்வு எழுதும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை விவரம், தேவையான வகுப்பறைகள் உள்ளதா? என்பது குறித்த விவரத்தை தெரிவிக்க வேண்டும்.

நோய் தொற்று அதிக அளவில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் படிக்கும் மாணவர்களுக்கு தனியாக சிறப்பு மையம் அமைத்து பத்தாம் வகுப்பு தேர்வு நடத்துவதில் கடும் சிக்கல் எழுந்துள்ளது. மேலும் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து வரும் மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு மையம் அமைப்பது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மாறுப்பட்ட கருத்து தெரிவித்துவருவது ஆசிரியர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பார்க்க:உடனுக்குடன்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஐந்தாம் நாள் அறிவிப்புகள்

Last Updated : May 17, 2020, 2:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details