தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

100 யூனிட் மின்சாரம் ரத்தாகுமா? - அமைச்சர் தரும் விளக்கம் - 100 யூனிட் இலவச மின்சாரம்

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைத்தால் 100 யூனிட் மின்சாரம் இலவசமா கிடைக்குமா என்பது குறித்து பரவி வந்த தகவலுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைத்தால் மட்டுமே 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்பது வதந்தி
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைத்தால் மட்டுமே 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்பது வதந்தி

By

Published : Nov 18, 2022, 10:44 PM IST

சென்னை:அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வடகிழக்குப் பருவமழை குறித்து வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பணி குறித்தும், விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கை குறித்தும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் அதிகாரிகள் உடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் எந்தவித தடையும் இல்லாமல் சீரான மின்சாரம் வழங்குவது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்று உள்ளது. எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல் சீரான மின்சாரம் வழங்கி வருவதாகவும், கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை பழுதடைந்த 44,000 மின்கம்பங்கள் புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

100 நாட்களில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்விநியோகம் வழங்குவதற்கான திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பை முதலமைச்சர் வழங்கினார். மீதமுள்ள விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் மழையால் பாதிப்பு ஏற்பட்டால் உடனுக்குடன் மின்னகத்தை தொடர்பு கொண்டு எந்த இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை பொதுமக்கள் புகார் தெரிவிக்க வேண்டும். புகாரின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

சீர்காழியினை பொறுத்தவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரணம் வழங்கியுள்ளார். 46 மின் மாற்றிகள் புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மழையினால் சென்னையில் எவ்விதப் பாதிப்பும் இல்லை. சீர்காழியில் மழையினால் பாதிக்கப்பட்டதை அடுத்து 36 மணி நேரத்தில் சீராக மின்விநியோகம் கிடைக்கும்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து கூடுதலாக பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு உடனடியாக சரி செய்யப்பட்டது.

மழை பெய்தாலும் கூட தடையில்லாமல் மின் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக சிலர் பாராட்டுகின்றனர். வீடுகளில் மற்றும் பள்ளிகளில் உள்ள வயர்களை பொறுத்தவரை நாம் தான் கவனமாக இருக்க வேண்டும். இது குறித்து மின்சார வாரியம் பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க, அனைவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைத்தால் மட்டுமே 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்பது வதந்தி

மின் நுகர்வோர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் போது ஒரு நுகர்வோர் 3 முதல் 5 வீடுகள் வைத்திருந்தால் கூட ஆதார் எண்ணை இணைக்கும் போது 100 யூனிட் மானியம் மின்சாரம் என்பது தொடரும். ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் மானியம் மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று வரும் தகவல் வதந்தி. இதுவரை 560 கோடி மின்வாரியத்திற்கு சேமிப்பு அதிகரித்துள்ளது" என கூறினார்.

இதையும் படிங்க: வினாத்தாள் குளறுபடி: சென்னை பல்கலை.யில் நடைபெற இருந்த தமிழ் தேர்வுகள் ரத்து!

ABOUT THE AUTHOR

...view details