சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் புழல் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், ஏற்கனவே கிருஷ்ணா நதி நீர்வரத்து காரணமாக நீர் நிரம்பி வந்தது. இந்த நிலையில் அண்மையில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக புழல் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.
நேற்றைய (நவ 2) நிலவரப்படி, புழல் ஏரியில் 2,717 மில்லியன் கன அடி நீர் நிரம்பியுள்ளது. இதனால் 21.2 அடி ஆழம் கொண்ட புழல் ஏரியின் நீர்மட்டம் 18.54 அடியாக உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 539 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை குடிநீருக்காக 159 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
தற்போது புழல் ஏரி 82.33% நீர் இருப்பை நெருங்கியதால் ஏரியின் பாதுகாப்பு கருதி, முதற்கட்டமாக வினாடிக்கு 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனை நீர்வளத்துறை அலுவலர்கள் பூஜை செய்து ஏரியில் இருந்து தண்ணீரை வெளியேற்றினர். மேலும் புழல் ஏரியின் உபரிநீர் திறக்கும் இரண்டு மதகுகளில் ஒரு மதகின் வழியாக வெளியேற்றப்பட்டுள்ள உபரி நீர் சுமார் 13.5 கி.மீ. கால்வாய் வழியே எண்ணூர் கடலில் சென்று சேரவுள்ளது.