சென்னை: ஒரேநாளில் பல இடங்களில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட 10 பேரை 24 மணி நேரத்தில் பிடித்த காவல் துறையினருக்கு, சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
சென்னையில் நேற்று (செப்.23) நடைபெற்ற ஏழு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 10 பேரை காவல் துறையினர் கண்கானிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளின் உதவியுடன் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 15 ஆயிரம் ரூபாய் பணம், 13 செல்போன்கள், ஐந்து சவரன் மதிப்புள்ள மூன்று தங்கச் செயின்கள், மூனறு கத்திகள், இரண்டு இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், அனைத்து குற்றச் சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பல் தான் என விசாரணையில் தெரியவந்தது. நேற்று (செப்.23) அதிகாலை ஒரு மணியளவில் மயிலாப்பூர் லஸ் கார்னர் பகுதியில் தொடங்கி ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், ராயபுரம், தண்டையார்பேட்டை வரை கண்ணில் பட்டவர்களைத் தாக்கி, செல்போன், தங்கச் செயின், பணம் ஆகியவற்றை கத்தியைக் காட்டி மிரட்டி பறித்துச் சென்றதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, குற்றவாளிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களைக் காட்சிப்படுத்தும் நிகழ்ச்சி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (செப்.24) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், வழக்குகளை விரைந்து விசாரணை நடத்தி, ஒரே நாளில் இதில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைதுசெய்த காவல் உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் 15 பேருக்கு சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.