சென்னை:கரோனா தொற்று பரவல் காரணமாக ஒர் ஆண்டுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன்பின் நவம்பர் 1ஆம் தேதி 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
பள்ளிகள் காலதாமதமாக திறக்கப்பட்டதாலும், மாணவர்கள் படிப்பதற்கு போதுமான கால அவகாசம் இல்லாததாலும் பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டங்களை குறைத்து வழங்கியது.
ஏப்ரலில் செய்முறைத்தேர்வு
பள்ளிகள் திறப்பதற்காக அமைக்கப்பட்ட குழு ஆசிரியர்கள் பாடத்திட்டங்களை நடத்தி முடிப்பதற்கு தேவையான வேலைநாட்களையும் கணக்கிட்டு வழங்கியது. அதன் அடிப்படையில் 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு வழக்கமாக நடைபெறும் பிப்ரவரி மாதத்திற்கு மாற்றாக ஏப்ரல் மாதம் நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு ஜனவரி மற்றும் மார்ச் மாதம் நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் செய்முறை தேர்வுகள் நடத்தப்பட்டு, மே மாதம் பொதுத்தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்கம் தயார் செய்துள்ளது. அதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விரைவில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: நீட் விவகாரத்தில் காலக்கெடுவை நிர்ணயிக்க சிறப்பு கவன ஈர்ப்புத்தீர்மானம் கொண்டுவந்த எம்.பி.வில்சன்!