பொறியியல் படிப்பின் மீதான ஆர்வம் மாணவர்களுக்கு சமீப காலமாக குறைந்துவிட்டதாக ஒரு தரப்பினர் கூறினர். ஆனால் தற்போது பொறியியல் படிப்பில் சேர 1 லட்சத்து 74 ஆயிரத்து 930 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
மேலும் கரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு, அதிக மதிப்பெண்கள் பெற்றதால் மாணவர்களுக்கு சிறந்த கல்லூரிகள் கிடைக்கும் என்பதாலும் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கருதப்படுகிறது.
கரோனா தொற்றின் காரணமாக அரசு தேர்வுத் துறையின் மூலம் வழங்கப்பட்ட மதிப்பெண்கள் பெரும்பாலும் 60 சதவீதத்திற்கு மேல் இருப்பதால் மாணவர்கள் வேலை வாய்ப்பிற்கு செல்வதற்கும் பயனுள்ளதாக அமையும் என்பதால் அதிகளவில் விண்ணப்பித்துள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, பொறியியல் படிப்பில் சேர ஜூலை 26 முதல் ஆக.24ஆம் தேதி வரை, ஆன்லைன் மூலம் www.tneaonline.org, www.tndte.gov.in என்ற இணையதளங்களின் மூலம் தொழில் நுட்ப கல்வி இயக்ககம் விண்ணப்பங்களை பெற்றது. தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பினை முடித்துள்ளது.
பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்திருந்த ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 930 மாணவர்களுக்கான ரேண்டம் எண்கள் 25ஆம் தேதி வெளியிடப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் பள்ளிக் கல்வித் துறையின் கல்வித்தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தின் மூலம் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையில் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களுடைய விவரத்தின் அடிப்படையில் 8 ஆண்டிற்கு பின்னர் மீண்டும் பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது.