சென்னை:சைதாப்போட்டை தொகுதியில் கொத்தவால்சாவடி குடிசை மாற்று குடியிருப்பு பகுதியில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து ஜோன்ஸ் சாலையில் நடமாடும் மருத்துவ குழுவை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், "தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் கடந்த 2 நாட்களில் 4 ஆயிரத்து 55 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த முகாம்கள் மூலம் 1 லட்சத்து 63 ஆயிரத்து 63 பேர் பயன் அடைந்துள்ளனர். சென்னையில் 500 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. மழைக்காலத்தில் மக்களுக்கு ஏற்படும் காய்ச்சல், சளி, இருமல், சேத்துப்புண், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் மூன்று மாதத்திற்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. மருத்துவக்கல்லூரிகளில் பணியாற்றி வரும் 100 மருத்துவர்கள் சிறப்பு முகாம்களில் பணியாற்றி வருகின்றனர். மேலும் துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட மருத்துவமனைகளில் பணியாற்றும் ஊழியர்கள் 1 லட்சம் பேர் முகாம்களில் பணியாற்றி வருகின்றனர்.